உங்கள் வாழ்நாளில் தமிழகத்தை ஒருபோதும் ஆளமுடியாது என்று பாஜக குறித்து நாடாளுமன்றத்தில்  ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

rahul gandhi

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியதாவது: 'தற்போது இரண்டு இந்தியா உள்ளது. ஒன்று பணக்கார இந்தியா மற்றொன்று ஏழை இந்தியா. இந்த இரண்டிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்றவை இருந்தும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. சிறு குறு தொழில்களை ஆதிரிக்காமல் மேக் இன் இந்தியா என்பது சாத்தியமில்லாத ஒன்று. சிறிய நடுத்தர தொழில்கள் மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

தற்போது 84 சதவீத இந்தியர்களின் வருமானம் குறைந்து, அவர்கள் வறுமையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு இந்தியாவையும் ஒன்றிணைக்கும் பணியை பிரதமர் தொடங்கவேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். ஆனால் தற்போது ஆளும் அரசு அந்த 27 கோடி மக்களையும் மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளது.

அரசு நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. நீதித்துறை, தேர்தல் ஆணையம் பெகாசஸ் என அனைத்தும் மாநிலங்களின் குரலை அழிக்கும் கருவிகள். ஜனாதிபதி  ஆற்றிய உரையில் எந்த பிரச்சினை பற்றியும் ஆழமாக குறிப்பிடப்படவில்லை. நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அந்த உரையில் எதுவும் இல்லை. 

இந்தியா என்பது மாநிலங்களுடன் இணைந்த ஒன்றியம் ஆகும். இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது. நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல், இந்தியாவை ஒரு அரசால் ஆட்சி செய்ய முடியாது. நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது. 

உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை மத்திய அரசால் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விரட்டி அடிக்கிறது. நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது' இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும் மக்களவையில் உரையாற்றிய ராகுல் காந்தி அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த நிலையில் மக்களவையில் தமிழகம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் குறித்து பலமுறை பேசியது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு ராகுல் காந்தி 'நானும் ஒரு தமிழன் தான்' என்று பதிலளித்தார்.