சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மடிப்பாக்கம் 188 வது திமுக வட்ட செயலாளரான 38 வயதான செல்வம், அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன், மடிப்பாக்கம் பகுதியின் திமுக வட்டச் செயலாளராகவும் செல்வம் இருந்து வந்தார். 

இவர், தற்போது நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் 188 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முழு வீச்சில் செயல்பட்டு வந்தார். அதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகளை மிக தீவிரமாக செய்து வந்தார்.

இந்த சூழலில் தான், இவர் நேற்று முன் தினம் இரவு ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், இவர்கள் வந்த காரை வழி மறித்து உள்ளனர்.

இதனையடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் திமுக வட்டச் செயலாளரான செல்வத்தை அந்த கும்பல் சரமாறியாக வெட்டி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.

அத்துடன், செல்வத்தை வெட்டிய அந்த 6 பேர் கொண்ட கும்பல், தாங்கள் வந்த இரு சக்கர வாகனங்களில் உடனடியாக தப்பிச் சென்று உள்ளனர். 

அப்போது, அந்த வழியாக வந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வதை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள், “இவர், வரும் வழியிலேயே ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக” கூறி உள்ளனர். 

மேலும், இது குறித்து தகவல் அறிந்த மடிப்பாக்கம் காவல் துறையினர், செல்வத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், செல்வம் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்வம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அந்த பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க மடிப்பாக்கம் பகுதியில் ஏராளமான போலீசாரை குவித்து உள்ளனர். இதனால், மடிப்பாக்கம் பகுதியில் முன்பை விட தற்போது பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

குறிப்பாக, இந்த கொலை வழக்கு குறத்து 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தான், மடிப்பாக்கம் திமுக வட்டச்செயலாளர் செல்வம் கொலை வழக்கில் திருச்சியில் இன்றைய தினம் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். 

அதுவும், திருச்சி சமயபுரம் சுங்கச் சாவடியில் காரில் வந்த ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகிய 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

இப்படியாக “கைது செய்யப்பட்ட 2 பேரும் மடிப்பாகம் செல்வம் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாகவும்” போலீசார் தெரிவித்து உள்ளனர். 

மிக முக்கியமாக, “கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் அதிமுக நிர்வாகி” என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

இருவரையும் விசாரணைக்கு சென்னைக்கு அழைத்து வர போலீசார் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பலரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதனால், இன்னும் பலர் அதிரடியாக கைது செய்யப்படலாம் என்கிற தகவலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.