காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் கன்னையா குமார் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் மிக விரைவில் தேர்தல் நடைபெற இருக்கின்றன. இதனால், இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது.

இந்த மாநிலங்களில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்தியாவிலேயே மிக அதிகமான தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. அங்கு 403 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. 

அதன் படி,  உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடக்கிறது.

அதாவது, உத்தரப் பிரதேசத்தில் வரும் 10 ஆம் தேதி 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 58 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக, வரிந்துக்கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அத்துடன், அங்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி வாக்கு சேகரித்து வருகின்றன. 

மேலும், உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில், பிரியங்கா காந்தியை முன்னிறுத்தியே அங்கு காங்கிரஸ் தனது தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.

ஆனாலும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன.

இப்படியான சூழலில் தான், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட நட்சத்திர பேச்சாளர்கள் 30 பேர் அடங்கிய பட்டியலை, காங்கிரஸ் கட்சி முன்னதாக வெளியிட்டது. 

இந்த பட்டியலில், காங்கிரஸ் கட்சியின் முண்ணனி தலைவர்களுடன் மாநிலங்களவை முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பூபிந்தர் சிங் ஹூடா, முன்னாள் எம்.பி. ராஜ் பப்பர், சச்சின் பைலட் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இவர்களுடன், அக்கட்சியின் இளம் தலைவர்களான தீபிந்தர் சிங் ஹூடா, கன்னையா குமார் உள்ளிட்ட 30 பேரின் பெயர்களும் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றன.

அதாவது, ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிஹாரின் பெகுசராய் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட கன்னையா குமார், கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 

அவரோடு குஜராத் எம்எல்ஏ வுமான ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர், இது தொடர்பாக பேசிய அவர் “நமது நாட்டைக் காப்பாற்றுவதற்காகத் தான் நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்” என்றும், கன்னையா குமார் கூறினார்.

இந்த நிலையில் தான், உத்தரப் பிரதேசத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் சுழன்றுக்கொண்டிருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நேற்று தேர்தல் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், அக்கட்சியின் இளம் தலைவர் கன்னையா குமார், சக உறுப்பினர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, தேவனேஷ் பாஜ்பாயி என்ற இளைஞர், கன்னையா குமார் மீது திடீரென்று ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர், உடனடியாக தேவனேஷைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், கன்னையா குமார் மீது திடீரென்று ஆசிட் ஊற்றியது பற்றி, அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும், அந்த மாநில ஊடகத்தில் தாங்கள் நேரில் பார்த்தது குறித்து பேசி வருகின்றனர். 

ஆனாலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்த மாநில போலீசார், தங்களது விசாரணையில் “அது ரசாயனம் கலந்த மை” என்றே போலீசார் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, இது தொடர்பான போலீஸ் விசாரணையில், “தேவனேஷ் எந்தக் கட்சியை சாராதவர் என்றும், சட்டக்கல்லூரி மாணவர்” என்றும் தெரிய வந்துள்ளதாக கூறி உள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.