தமிழ் திரை உலகின் இன்றியமையாத முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இணைந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என படிப்படியாக வளர்ந்த சிவகார்த்திகேயனின் வெற்றிப் பயணம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு அசுர வளர்ச்சி கண்டது.

இதனையடுத்து வெளிவந்த மான்கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்கள் நடிகராக சிவகார்த்திகேயனின் மற்றொரு தளத்திற்கு உயர்த்தியது. இடையே சீமராஜா, Mr.லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியடைந்த போதிலும் அதன் பிறகு வெளிவந்த நம்ம வீட்டுப்பிள்ளை, ஹீரோ திரைப்படங்களின் வெற்றி சிவகார்த்திகேயனுக்கு என மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதை நிரூபித்தது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு வயதினரையும் அனைத்து சினிமா ரசிகர்களையும் ஈர்க்கும் விதமான என்டர்ட்டெயினிங் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் கடைசியாக வெளிவந்த டாக்டர் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனதோடு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனுக்கு என தனி இடத்தை பதிவு செய்தது.

வருகிற மார்ச் 25 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் டான் படம் ரிலீஸாக உள்ள நிலையில் சயின்ஸ் ஃபிக்ஷன் நகைச்சுவை திரைப்படமாக தயாராகியிருக்கும் அயலான் திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் SK20 மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமாகி தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த அறிக்கையில், 

இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள்…
நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். 
இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்து கூட பார்த்திராத நிஜம். 

இத்தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும், உடன் நின்று பயணித்த இயக்குனர்களுக்கும், தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள நண்பர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

எல்லாவற்றிற்கும் மேலாக,

என் தாய்த்தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி-தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள்.

எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் - இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே!!! என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும்.

உங்கள்,
சிவகார்த்திகேயன்

என தெரிவித்துள்ளார். இந்த வெற்றிப் பயணம் தொடரட்டும் என கலாட்டா குழுமம் சார்பாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.