“தோழிகள் இருந்தால் பாலியல் ரீதியான உறவுக்குதான் என நினைப்பது தவறு” என்று, இளைஞர்களுக்கு மும்பை போக்சோ நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

அதாவது, மும்பையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், தனது தூரத்து உறவினரின் மகளான 13 வயது சிறுமியிடம் நட்பாக பழகி வந்திருக்கிறார்.

இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, ஒரு கட்டத்தில் அந்த 20 வயதான இளைஞர், அந்த 13 வயது சிறுமியை பலவந்தமாக பாலியல் வன்கொடுமையையும் செய்துள்ளதாக தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த 13 வயது சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் அந்த இளைஞர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை அதிரடியாக கைது செய்தனர். 

அத்துடன், இது தொடர்பான வழக்கு மும்பை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை, நீதிபதி ப்ரீத்தி குமார் குலே விசாரித்து வந்தார். 

அதன்படி, இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அப்போது, சம்மந்தப்பட்ட 20 வயது இளைஞர், அந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததும் நிரூபிக்கப்பட்டது. 

இதன் காரணமாக, அந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு குறித்து கவலையுடன் பேசிய நீதிபதி ப்ரீத்தி குமார், “இந்த வழக்கில் கடந்த 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது, குற்றவாளியின் வயதில் இருக்கும் சமூகத்தில் வாழும் மற்ற இளைஞர்களுக்கான ஒரு முன் உதாரணம்” என்று, குறிப்பிட்டார்.

குறிப்பாக, “உங்களின் அடக்க முடியாத காமத்தையும் உடற்பசியையும் தீர்த்துக்கொள்ள கட்டுப்பாடற்ற ஆசை என்பது, இளைஞர்களின் எதிர்காலம், அவர்களது வாழ்க்கை மற்றும் வாழ்க்கையில் வளர்ச்சிக்கான பொன்னான காலத்தை முற்றிலுமாக அழித்து விடும்” என்பதையும் நாம் உணர வேண்டும்” என்றும், வலியுறுத்தினார்.

முக்கியமாக, “பெண் தோழிகள் என்பவர்கள், உங்களின் காமத்தையோ உடல் பசியையோ தீர்ப்பவர்கள் இல்லை என்பதை உணர வேண்டும்” என்றும், கூறினார்.

“இந்த வழக்கை பொறுத்த வரை, சிறுமியின் வாழ்க்கையை சிதைத்து விட்டார் என்றும், அவரின் வாழ்க்கையை ஆரம்பத்திலேயே அழித்து விட்டார்” என்றும், நீதிபதி வேதனை தெரிவித்தார்.

“இதனால், குற்றம் இழைத்த இளைஞர் மற்றும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஆகிய இருவரின் எதிர்காலமும் இருளாக்கப்பட்டு உள்ளது என்றும், குறிப்பாக இளைஞரின் செயலால் அச்சிறுமியின் திருமணத்திற்கு பெரும் தடை ஏற்பட்டு உள்ளது என்றுமு், இதனை எல்லாம் இன்றைய இளைஞர்கள் புரிந்துக்கொண்டு எதிர்காலத்தில் நடுந்துகொள்ள வேண்டும்” என்றும், நீதிபதி ப்ரீத்தி குமார் அறிவுரை வழங்கினார்.