இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் அதிகம் பேரால் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் என்னவென்று பார்த்தால் சிக்கன் பிரியாணியும், சமோசாவும் தான் என ஸ்விக்கி ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியர்களுக்கு வேறு எந்த உணவையும்விட பிரியாணி மீது அதீதமான பிரியமும், ஆசையும் இருப்பதை ஒவ்வொரு ஆண்டும் வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் ஆர்டர்களின் அடிப்படையில் ஸ்விக்கி நிறுவனம் எந்த ஊர் மக்கள், எந்த உணவை அதிகம் விரும்பி சாப்பிட்டு உள்ளனர் என்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 

2021-ம் ஆண்டில் அதிகமான ஆர்டர் செய்யப்பட்டவை, லேட் நைட் ஆர்டர், அதிகாலை ஆர்டர், டிப்ஸ் உள்ளிட்டவை குறித்த ஸ்விக்கியின் 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான “ஸ்டாட்ஈட்டிக்ஸ்டிக்ஸ்” (Swiggy's annual StatEATstics) அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 

swiggy order 2021 report chicken biryani

இந்த ஆண்டு 500 நகரங்களில் பெறப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கடந்த 2020-ம் ஆண்டில் ஒரு நிமிடத்துக்கு 90 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்ட நிலையில் 2021-ம் ஆண்டில் ஒரு நிமிடத்துக்கு 115 பிரியாணியாக அதிகரித்துள்ளது. 

இதன்மூலம் சிக்கன் பிரியாணி தான் முதலிடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டிலும் சிக்கன் பிரியாணி தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஆட்சி செய்து வருகிறது. வெஜிடபிள் பிரியாணியோடு ஒப்பிடுகையில் அதைவிட 4.3 மடங்கு அதிகமான ஆர்டர் சிக்கன் பிரியாணிக்குக் கிடைத்துள்ளது. 

ஸ்விக்கியில் புதிதாக இணைந்த 4.25 லட்சம் வாடிக்கையாளர்களும் சிக்கன் பிரியாணியைத்தான் அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர். ஸ்விக்கியில் அடுத்ததாக கவனம் பெற்றது சமோசா. இந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 50 லட்சம் சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளனர். 

சிக்கன் விங்ஸ், பாவ் பாஜியைவிட 6 மடங்கு ஆர்டர் சமோசாவுக்குக் கிடைத்துள்ளது. ஏறக்குறைய நியூஸிலாந்து மக்கள் தொகை எண்ணிக்கையில் சமோசாவை இந்தியர்கள் ஆர்டர் செய்துள்ளனர். அடுத்தாற்போல் பாவ் பாஜிக்கு 21 லட்சம் ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

இனிப்பு வகைகளில் முதலிடத்தில் ரோஜாப்பூ மணம்கொண்ட குலாப் ஜாமுன் முதலிடத்தில் உள்ளது. 21 லட்சம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக ரஸமலாய் 12.70 லட்சம் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்துதான் சிக்கன் பிரியாணி அதிகமான அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மும்பையில் சிக்கன் பிரியாணியைவிட தால் கிச்சடி அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

ஸ்விக்கி வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னை மக்கள் அதிகம் சாப்பிட்ட உணவுகள் பட்டியலில் முதல் இடத்தைச் சிக்கன் பிரியாணி பெற்ற நிலையில் அடுத்த இடத்தைச் சிக்கன் ப்ரைட் ரைஸ், மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, நெய் பொங்கல் ஆகியவை டாப் 5 இடத்தைப் பிடித்துள்ளது.

swiggy order chicken biryani

பெங்களூரு மக்கள் தங்கள் உடல்நலத்தில் அதிகமான அக்கறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை மக்கள் உள்ளனர். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மக்கள் ஆரோக்கியமான உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஆர்டர் செய்துள்ளனர். 

காய்கறிகள், பழங்கள் சார்ந்த சாலட் உணவுகள் 83 சதவீதம் ஆர்டர்கள் வந்துள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 2.80 கோடி பழங்கள், காய்கறிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. முதல் 5 இடங்களில் உள்ள காய்கறிகள் பழங்களில், தக்காளி, வாழைப்ழம், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் உள்ளன. 

இவை ஆர்டர் செய்யப்பட்ட 30 நிமிடங்களில் வாடிக்கையாளர்களிடம் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. தக்காளி ஆர்டர் செய்யப்பட்ட அளவை வைத்து ஸ்பெயின் தக்காளித் திருவிழாவை 11 ஆண்டுகளுக்கு நடத்திவிடலாம்.

நூடுல்ஸைப் பொறுத்தவரை 14 லட்சம் உடனடி நூடுல்ஸ் பாக்கெட்டை ஸ்விக்கி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. 31 லட்சம் சாக்லெட் பாக்கெட்டுகள், 23 லட்சம் ஐஸ் க்ரீம்கள், 61 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகளை ஸ்விக்கி டெலிவரி செய்துள்ளது. 

அதிலும் இரவு 10 மணிக்குமேல் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டதில் சிப்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா காலத்தில் ஸ்விக்கி மூலம் ஒரு லட்சம் முகக்கவசம், 4 லட்சம் சோப்புகள், ஹேண்ட்வாஷ், 70 ஆயிரம் பேண்ட்-எய்ட், 55 ஆயிரம் பேக் டயாப்பர், 3 லட்சம் பேக் சானிட்டரி நாப்கின் ஆகியவை ஆர்டர் செய்யப்பட்ட 15 முதல் 30 நிமிடங்களில் வழங்கப்பட்டுள்ளன'' இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.