“ஜெய் பீம்” படத்தின் நிஜ நாயகியான மூதாட்டி பார்வதியம்மாள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து உருக்கமாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான “2 டி என்டர்டெயின்மென்ட்” சார்பில் தயாரித்து, நடித்துள்ள படம் “ஜெய்பீம்”. 

இந்தப் படத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துருவின் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா, வாழ்ந்திருந்தார்.

த.செ.ஞானவேல் இயக்கியுள்ள “ஜெய்பீம்” திரைப்படமானது, அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 

“ஜெய்பீம்” திரைப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பாராட்டி அந்த படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், அந்தப் படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக எழுந்த சர்ச்சை, மிகப் பெரிய எதிர்பலைகளையும் அந்த படத்திற்கு ஏற்படுத்தியது.

அத்துடன், பல மொழிகளில் இந்த படம் வெளியாகி, மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றது. 

இதனால், இந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சினிமாவின் பட்டியலில்  “ஜெய்பீம்” திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது.

இந்த நிலையில் தான், அந்த படத்தில் “செங்கேணி” கதாபாத்திரம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அப்படி, நிஜ வாழ்க்கையில் செங்கேணியான பார்வதியம்மாள் தமிழகத்தின் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். இதனையடுத்து. பார்வதியம்மாளுக்கு உதவிகள் குவியத் தொடங்கி உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய் நிதியை, பார்வதியம்மாளுக்கு வழங்கி, அவருக்கு உதவி செய்தார்.

அந்த நேரத்தில், தமிழக அரசு சார்பில் பார்வதியம்மாளுக்கு சென்ற சேர வேண்டிய நில பத்திரம் கொடுக்கப்பட்டது. அத்துடன், அந்த இடத்தில் வீடு கட்டிக்கொள்ளவும் தமிழக அரசு செலவு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், தமிழக அரசு சார்பாக இங்கு வீடு கட்டித்தரப்படும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டார். 

அதன் தொடர்ச்சியாகவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, பார்வதியம்மாள் இன்றைய தினம் நேரில் சந்தித்து, அவருக்கு “ வீடு கட்டித்தர உத்தரவிட்டதற்கு நன்றி” தெரிவித்தார்.

அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பேசிய பார்வதியம்மாள், “நான் இத்தனை காலமும் குடிசையில் தான் வாழ்ந்தேன்” என்று, மிகவும் உருக்கமாக கூறி, தனது “நன்றியையும்” அவர் தெரிவித்தார்.

அப்போது, பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றும், உங்களுக்கு வீடு கட்டித்தரப்படும்” என்றும், முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வதியம்மாளுக்கு உறுதிப்படத் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான பார்வதியம்மாளின் இந்த சந்திப்பு, சற்று உருக்கமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.