ஆன்லைன் நண்பனைத் தேடி ஸ்வீடன் நாட்டில் இருந்து மும்பை வந்து தங்கியிருந்த சிறுமியை, போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அந்நாட்டில் பள்ளியில் படித்து வருகிறார். இந்த 16 வயது சிறுமி, கடந்த மாதம் 26 ஆம் தேதி ஸ்வீட்டின் நாட்டில் உள்ள தனது வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி உள்ளார்.

வீட்டில் மகள் மாயமானதும் கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தந்தை, இது குறித்து அந்நாட்டு காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இது தொடர்பான விசாரணையில், மாயமான 16 வயது ஸ்வீடன் மாணவி, மும்பையை சேர்ந்த 19 வயது இளைஞனுடன் சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில் பழகி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அந்த சிறுமி மாயமானது தொடர்பாக சர்வதேச போலீசாரின் எல்லோ நோட்டீஸானது, கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட மும்பை குற்றப்பிரிவு போலீசார், வெளிநாட்டு சிறுமியுடன் தொடர்பில் இருந்த இளைஞரை புதிய தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடித்தனர். 

அப்போது, அந்த இளைஞர் கல்லூரி மாணவன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், ஸ்வீடனிலிருந்து மும்பை வந்த சிறுமி, அங்குள்ள சீத்தாகேம்ப் பகுதியில் தங்கி இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். அதன் தொடர்ச்சியாக, சிறுமியை அங்குள்ள டோங்கிரியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
 
இந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்ட தகவல் ஸ்வீடன் நாட்டில் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு ஸ்வீடன் தூதரக அதிகாரிகள் மூலமாக போலீசார் தெரியப்படுத்தினர். 

இதனைக் கேட்டு சந்தோசம் அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், ஸ்வீடன் நாட்டிலிருந்து தற்போது மும்பை விரைந்து வந்துள்ளனர்.

மேலும், மும்பையில் சட்ட வழி முறைகள் எல்லாம் முடிந்த பிறகு, போலீசார் சிறுமியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகே, மீட்கப்பட்ட அந்த 16 வயது சிறுமியை, அவரது பெற்றோர் சொந்த நாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கு பற்றிய பேசிய மும்பை போலீஸ் துணை கமிஷனர் நீலோட்பால், “ஸ்வீடன் நாட்டு சிறுமி, சுற்றுலா விசாவில் மும்பை வந்தார் என்றும், இன்ஸ்டாகிராம் நண்பனுக்கு எதிராக எந்த புகாரும் அளிக்கவில்லை” என்றும், குறிப்பிட்டார்.

இதனால், “இந்த சம்பவத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை” என்றும், அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே, ஆன்லைன் நண்பனை பார்க்க, 16 வயது சிறுமி ஒருவர்,  ஸ்வீடன் நாட்டில் இருந்து மும்பை வந்த சம்பவம், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.