ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த 2-ந் தேதி முதலில் கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் 17 மாநிலங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா பரவியது.

17 மாநிலங்களில் பரவியதன் மூலம் ஒமிக்ரான் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நோய் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.    

omicron night curfewகொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருந்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர், "ஒரு மாவட்டத்தில் கொரோனா உறுதியாகும் சதவீதம் 10%-க்கும் அதிகமாக இருந்தாலோ அல்லது 40%-க்கும் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஒருவாரத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலோ அதிகாரிகள் உடனடியாக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.  
 
உள்ளூர் சூழ்நிலை மற்றும் ஒமிக்ரான் பரவும் விகிதத்தைப் பொறுத்து, இந்த வரம்புகளை எட்டுவதற்கு முன்பே மாநிலங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கலாம். 

கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துதல், பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை எடுக்கலாம்’ என தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஓமிக்ரான் பரவாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் அதனை தொடர்ந்து டெல்லி மாநிலத்திலும் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படாத மத்தியப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது.

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இரவு நேர ஊரடங்கின்போது பொது மக்கள் வெளியில் வரக் கூடாது என்று மத்தியப்பிரதேசத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் உத்தரப் பிரதேசத்திலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

lockdownமேலும் அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்காக தேர்தல் பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மேலும் 23 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியானது. மகாராஷ்டிராவில் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 88 ஆக உள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகபட்ச பாதிப்பு உள்ளது. 

ஒமிக்ரான் பரவல் மகராஷ்டிராவில் அதிகரித்து வருவதை அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து உள்ளது. இதன்படி கிறிஸ்துமஸ், புத்தாண்டை வழிபாட்டு தலங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் எளிமையாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று இரவு நாளை 25 ஆம் தேதி இரவு நடக்கும் பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் 50 சதவீதம் பேர் மட்டும் பங்கு பெறவேண்டும். ஆலயங்களுக்கு வெளியில் கடைகள் போடக்கூடாது. 

அதிக மக்கள் கூடும் வகையில் பேரணி, ஊர்வலங்கள், வான வேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து உள்ளது.