“திமுக கட்சி அல்ல.. கார்ப்பரேட் கம்பெனி..” என்று, முதலமைச்சர் பழனிசாமி மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதே போல், மதுரை, மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளானை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். 

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“திமுகவினரின் ரவுடித்தனங்களை தொலைக்காட்சிகளின் மூலமாக நாம் பார்த்திருக்கிறோம். அதனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டு மக்கள் வாழ முடியுமா? அல்லது வாழத்தான் விடுவார்களா?” என்றும், முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

“திமுக என்றாலே ரவுடி கட்சி என்று தான் மக்கள் நினைக்கிறார்கள் என்றும், ஆனால் அதிமுக அரசில் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்” என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டார்.

“அப்படி, மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும், தொழில் செய்வோர் நிம்மதியாகத் தொழில் புரிவதற்கும் அதிமுக அரசு தான் உறுதுணையாக இருக்கும் என்றும்” அவர் கூறினார். 

“ஹோட்டல்களில் சாப்பிட்டால் காசு கொடுக்கும் வழக்கம் திமுகவினருக்கு இல்லை என்றும், அப்பாவி மக்கள் பலரது நிலங்களை தங்கள் பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டவர்கள் திமுகவினர்” என்றும், முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

அத்துடன், “ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தபோது ஏறக்குறைய 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுத்தார் என்றும், கடந்த திமுக ஆட்சியில் நிலவிய கடுமையான மின்வெட்டு பிரச்சனையைச் சீரமைத்தது அதிமுக அரசு தான்” முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

“இந்த முயற்சியின் காரணமாக தற்போது தமிழக அரசு இந்தியாவிலேயே மின் மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது என்றும், அதே போன்று தொழில் தொடங்க உகந்த மாநிலமாகத் தமிழகம் திகழ்கின்றது என்ற காரணத்தால் நிறைய முதலீடுகள் தமிழகத்தை நோக்கி வரத் தொடங்கி உள்ளன” என்றும், முதலமைச்சர் பழனிசாமி பெருமையோடு நினைவு கூர்ந்தார்.

“விவசாயிகள் மத்தியில் அதிமுகவின் மதிப்பு உயர்ந்து வருவதாக” கூறிய முதலமைச்சர் பழனிசாமி, “திமுக அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி” என்றும், மிக கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “தமிழகத்தில் மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனையை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது என்றும், ஆனால் ஸ்டாலின் இதைக் குறை கூறுகிறார்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.