தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனாவால் தமிழக மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில், தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1636 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறது.

நேற்றைய தினம் கொரோனா பாதிப்படைந்த 1636 பேரில், 1,630 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 6 பேர் மட்டுமே வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தமிழக சுகாதாரத் துறை கூறியுள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டோரின் 

எண்ணிக்கை 2,43,287 ஆக உயர்ந்து உள்ளது. இதனால், தமிழகத்தில் இது வரை கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 8,71,440 ஆக அதிகரித்து உள்ளது.

அத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தற்போது 9,746 ஆக அதிகரித்து உள்ளது. 

தமிழகத்தில் 1,023 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது, 8,49,064 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது, அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என்று நேற்று மட்டும் மொத்தம் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், தமிழகத்தில் இது வரை மொத்தமாக கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையானது 12,618 ஆக அதிகரித்து இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் தான், தஞ்சை ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், அவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்கள் என்று, கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையானது, நிற்காமல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே சென்றுகொண்டு இருக்கிறது. 

இதன் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என்று அனைவருக்கும், முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, இன்று காலை வந்த பரிசோதனை முடிவில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சையில் 187 பள்ளி மாணவர்கள், 38 கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 225 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிப்பானது, இது வரை உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல், கொரோனா வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த 110 மாணவர்கள், தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், இது வரை பள்ளி மற்றும் கல்லூரி சென்று வந்த மாணவர்கள் அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.