“பெண் குழந்தை பிறந்தால் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும்” என்று, ஆயிரம் விளக்கு தொகுதி மக்களிடம் நடிகை குஷ்பு ஸ்பெஷலாக வாக்குறுதி அளித்து வருகிறார். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் களைக்கட்டத் தொடங்கி உள்ளது. நான் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்வேன் என்ற வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுச் சொல்லி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். வெறும் துண்டறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வாக்கு வேட்டை நடத்தி வரும் வேட்பாளர்கள் மத்தியில், எதையுமே சற்றே வித்தியாசமாக சிந்திக்கும் குஷ்பு தன் தொகுதிக்கு என்றே பிரத்தியேகமான வாக்குறுதிகள் அடங்கிய மினி தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டு உள்ளார்.

அதாவது, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறக்கியுள்ள குஷ்புவிற்கு அப்பகுதி பெண்களின் ஆதரவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. வாக்காளர்களிடம் இன்முகத்துடன் “வாக்களியுங்கள் உங்கள் சகோதரிக்கு” என இருகரம் கூப்பி வாக்கு சேகரித்து வரும் குஷ்புவுடன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். 

பிரபல நடிகை என்ற பிம்பம், பாஜக வேட்பாளர் என்ற பாகுபாடு எல்லாம் இல்லாமல், குஷ்புவை தங்கள் வீட்டு பெண்ணாகப் பாவிக்க ஆரம்பித்து உள்ளதையும் காண முடிகிறது. பிரச்சாரத்தில் ஈடுபட்ட சில நாட்களிலேயே தன் மீது அன்பை பொழிய ஆரம்பித்த மக்களுக்காக குஷ்பு சிறப்பான பல வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்து வருகிறார். 

அதன்படி, தேர்தல் களத்தில் பொது மக்களிடம் குஷ்பு அளித்துள்ள வாக்குறுதிகள் என்ன வென்றால், 

- ஆயிரம் விளக்குத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 70 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் பாதுகாப்புக்கும் மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கப்படும்.
- தொகுதியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கப்படும்.
- தொகுதிக்கு உட்பட்ட திருநங்கைகள் வாழ்க்கை சிறக்க நிதி உதவி செய்யப்படும்.- புற்று நோயாளிகள், இருதய நோயாளிகள் நலன் கருதி பாரதப் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு லட்சம் மருத்துவ காப்பிட்டு வசதி வழங்கப்படும்.
- ஆயிரம் விளக்குத் தொகுதியில் உள்ள பூங்காக்கள் முறையாகப் பராமரிக்கப்படும் புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.

- ஆயிரம் விளக்குத் தொகுதிக்கு உட்பட்ட வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி ஏற்படுத்தப்படும். 
- 18 
முதல் 23 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்.
- 8 ஆம் வகுப்பு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக டேப்லெட் வழங்கப்படும்.
- குறைந்த விலையில் மருந்தகம் (Generic Medicine ) மத்திய அரசின் திட்டமாக ஒவ்வொரு வார்டிலும் ஏற்படுத்தப்படும்.
- ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் அனைத்து மக்களுக்கும் 24 மணிநேரமும் சட்டமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொள்ளத் தொடர்பு எண் வழங்கப்படும்.
    
- ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகள் குடிநீர், கழிவுநீர் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும்.
- ஆயிரம் விளக்கு தொகுதியில் இருக்கும் பெண்கள், தங்கள் பிரச்சனைகளைக் குறைகளைக் கூற பெண்கள் குழு ஒவ்வொரு வார்டுக்கும் தொடங்கப்படும்.
- ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும், உங்கள் வீடு தேடி வந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
- ப்ளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க பயிற்சி மையம் அமைக்கப்படும்

- I.A.S படிக்கும் மாணவ மாணவிகளுக்குப் பயிற்சி மையம் தொடங்கப்படும்.
- ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட பெண்களுக்குக் கணினி பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்.
- ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் மாநகராட்சி விளையாட்டுத் திடல்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் நவீன முறையில் அமைக்கப்படும்.
- வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
- தொகுதிக்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒவ்வொரு வார்டிற்கும் ஆம்புலன்ஸ் வழங்கப்படும்.

- குடிநீர் குழாய்களில், கழிவு நீர் கலந்து விடும் பிரச்சனைகள் அறவே ஒழிக்கப்படும்.
- அனைத்து வார்டுகளிலும் சுகாதாரமான பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு, தூய்மையாகப் பராமரிக்கப்படும்.
- நூலகங்கள் நவீன மயமாக்கப்படும்.
- ஒவ்வொரு வார்டிலும் சட்டமன்ற உறுப்பினரின் தொடர்பு அலுவலகம் அமைக்கப்படும். 
- பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.

- நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் முத்ரா வங்கி கடன் கிடைக்க உதவி செய்யப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
- மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும்.
- வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி தகுதியான அனைவருக்கும் வேவை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
- ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிக்கூடங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.
- அரசுப் பள்ளிகளில் +2 தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு சிறப்பு தொகை வழங்கப்படும்.

- ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு காப்பகம் அமைக்கப்படும்.
- நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பட்டா பிரச்சனைகள் தீர்க்க உறுதியான முயற்சி எடுத்து பட்டா வழங்கப்படும்.
- சிறு குறு தொழில் தொடங்க பெண்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கிழ் கடன் உதவி பெற்றுத் தரப்படும்.
- இஸ்லாமியப் பெண்கள் வீட்டில் இருந்தபடியே சிறு குறு தொழில்கள் தொடங்கி நிரந்தர வருமானம் பெற வழிவகை செய்யப்படும். 

இப்படியாக, பெரும்பாலும் பெண்கள் வாக்குகளைக் குறி வைத்து அவர்களுக்காக பல்வேறு சிறப்பான மற்றும் அத்தியாவசியமான வாக்குறுதிகளை நடிகை குஷ்பு, தற்போது அறிவித்துள்ளார்.