சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வீடு, வீடாக வாக்கு சேகரிக்கும் நடிகை குஷ்புக்கு, செல்லும் இடமெல்லாம் தடபுடல் உபசரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் வழக்கமாக திமுக - அதிமுக என இருமுனை அல்லது மும்முனை போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில், தற்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என 5 முனை போட்டி நிலவி வருகிறது. இதனால், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களுக்கு தெரிந்த டெக்னிக்கை எல்லாம் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர். 

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் முக்கிய நட்சத்திர வேட்பாளரான குஷ்பு, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அதன் படி, இன்று ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் வீதி வீதியாக சென்று பாஜக வேட்பாளர் குஷ்பு  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  
அப்போது, தனது மனைவிக்காக நடிகரும், பிரபல இயக்குநருமான சுந்தர் சியும் நாள்தோறும் ஆயிரம் விளக்கு தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். இன்று குஷ்புவுடன் வாக்கு சேகரிக்க சென்ற சுந்தர் சியிடம், அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் சகஜமாக பேசி சிரிக்க வைத்தார். 

வாகனங்கள் செல்ல முடியாத குறுகலான தெருக்களில் கூட கணவருடன் சேர்ந்து குஷ்பு வீடு, வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். வீடு தேடி வாக்கு கேட்டு வரும் குஷ்புவிற்கு ஆதரவை மட்டுமல்ல அன்பையும் அள்ளி, அள்ளி கொடுத்து வருகின்றனர் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள். வெயிலில் ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்யும் குஷ்புவிற்கு குடிநீர், இளநீர் மற்றும் குளிர் பானங்களை கொடுத்து பாசத்துடன் உபசரிக்கின்றனர். கூடவே, அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்வதற்கு குழந்தைகள் பட்டாளம் காத்துக்கிடக்கிறது. வாக்கு சேகரிக்க செல்லும் பல பகுதிகளில் பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் குஷ்புவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக, தற்போது பிரச்சாரத்திற்கு மத்தியில் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “பாஜக மாநில தலைவருக்காக பிரசாரம் செய்ய ஆசை உள்ளது” என்று, குறிப்பிட்டார். 

மேலும், “அனைவரும் அவரவர் தொகுதியில் பரபரப்பாக உள்ளோம் என்றும், பிரசாரம் செய்ய எங்களுக்கு 15 நாட்கள் தான் கொடுத்து உள்ளனர் என்றும், நேரம் மிக குறைவாக உள்ளது” என்றும், அவர் கூறினார். 

“ஆனாலும், மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றும், இப்பொழுது தான் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள் என மக்கள் என்னிடம் கூறுகிறார்கள்” என்றும் நடிகை குஷ்பு, மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது நடிகை குஷ்பு, தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.