திருமண விழாவில் அழையா விருந்தாளியாய் நுழைந்த நடிகர் மன்சூர் அலிகான், மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு மொய் வைத்து பணம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் மன்சூர் அலிகான், எப்போதுமே பரபரப்புக்குப் பெயர் போனவர். கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

ஆனால், இந்த முறை சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சட்டசபை வேட்பாளராகத் தாம் போட்டியிட உள்ளதாக மன்சூர் அலிகான் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று சசிகலாவை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்தார். இதன் காரணமாக, நடிகர் மன்சூர் அலிகான் அதிருப்தி அடைந்து, தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாத இறுதியில், திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், சட்டசபைத் தேர்தலில் சீமான் தனக்குத் தொகுதி ஒதுக்கவில்லை என்றும், இது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருவதாகவும் கூறியிருந்தார்.

மேலும், நடிகர் மன்சூர் அலிகான் இந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு எடுத்து, அதன் படி கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

இதன் காரணமாக, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியிலேயே தங்கியிருக்கும் நடிகர் மன்சூர் அலிகான், அந்த பகுதி மக்களிடம் நூதன முறையில் வாக்குகளைச் சேகரித்து வருகிறார்.

அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான் நேற்றைய தினம் தொண்டாமுத்தூர் பகுதியின் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு இருந்தார்.

அப்போது, அங்குள்ள பேரூர் பகுதியில் ஆதரவு ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்த மன்சூர் அலிகான், திடீரென அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த திருமண நிகழ்வில் அழையா விருந்தாளியாய் நுழைந்து, அந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

அத்துடன், மணமக்களுக்காக வாசிக்கப்பட்ட பேண்ட் வாத்தியத்திற்கு நடிகர் மன்சூர் அலிகான் நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மேலும், அங்கிருந்த இசைக் கலைஞர்களுக்கு அன்பளிப்பு கொடுத்த  நடிகர் மன்சூர் அலிகான், மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கும் கைகளில் மொய்யாகப் பணம் வைத்து கொடுத்தார். 

இதனால்,  நடிகர் மன்சூர் அலிகான் உடன் மணமக்களும், அங்கு திருமண நிகழ்விற்கு வருகை தந்திருந்த விருந்தினர்களும் வரிசையாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

குறிப்பாக, மணமக்களை வாழ்த்திய நடிகர் மன்சூர் அலிகான், பொது மக்களிடையே குறைகளைக் கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக, “அனைத்துக் குறைகளும் உடனடியாகத் தீர்க்கப்படும்” என்றும், அவர் உறுதி அளித்திருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.