துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரால் தலைமறைவாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்த ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் தற்போது ராமநாதபுரம் விரைந்து உள்ளனர்.

கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல நடிகை சாந்தினி, பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்து, என்னை மோசடியாக ஏமாற்றி உள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

அத்துடன், “நான் சார்ந்த அந்தரங்க புகைப்படங்களை எனக்குத் தெரியாமல் எடுத்து, எனக்கே மிரட்டல் விடுத்ததாகவும்” அடுக்கான குற்றச்சாட்டுக்களை, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராகப் பிரபல நடிகை சாந்தினி புகார் அளித்தார். 

இந்த புகாரின் படி, சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இப்படியான நிலையில், பிரபல நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல் துறையினர் திட்டமிட்டு உள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியானது. 

ஆனால், அடுத்த நில நிமிடங்களில், “நடிகை சாந்தினி என் கணவர் மீது அவதூறு பரப்புவதால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். இதனால், இந்த வழக்கில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அந்த புகார் மனுவில், “எனது குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடும், எங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கத்தோடும், துணை நடிகை சாந்தினி தனது கணவர் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளதாக” குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “எனது கணவர் மீது நடிகை சாந்தினி அவதூறு பரப்புவதால், எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், அதனால் நடிகை சாந்தினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி, அந்த புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி கொடுத்த புகாரை, மதுரை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து, அங்கிருந்து சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்பி, புகாரை விசாரிக்கும்படி பரிந்துரை செய்துள்ளதாக எஸ்.பி. கார்த்திக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை குறித்து ஆதாரங்களைத் திரட்டவும், அவரது குடும்பத்தினர், அவரின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும், தனிப்படை காவல் துறையினர் தற்போது ராமநாதபுரம் விரைந்து உள்ளனர்.

அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னையில் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

அவருடைய உதவியாளர் செல்போன் எண் மூலம், அவர் மற்றவர்களிடம் பேசி வருவதை போலீசார் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். இதனால், அவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தற்போது மும்மரம் காட்டி வருகின்றனர். இதனால், இந்த வழக்கில் தற்போது பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.