ஆரம்பத்தில் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்த  நடிகை சோனா, சில திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். பின்னர் சில நகைச்சுவை குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவந்த சோனா  தற்போது தொலைக்காட்சி தொடர்களில் களமிறங்க உள்ளார்.

தமிழில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள அபி டெய்லர்ஸ் என்னும் புதிய மெகா தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இது பற்றி மனம் திறந்து பேசிய நடிகை சோனா "ஆரம்பகாலத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததால் தமிழில் தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களே தேடி வருகிறது. ஆனால் மலையாளத்தில் அப்படி அல்ல அங்கு வில்லி, குணச்சித்திரம் என பலவிதமான வேடங்களில் நடித்துவிட்டேன். தற்போது  அபி டெய்லர்ஸ் டிவி சீரியலில் நடிப்பதால் சினிமாவை  விடும் எண்ணம் இல்லை. தற்போதும் தமிழில் மூன்று திரைப்படங்களிலும் மலையாளத்தில் மூன்று திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன்.” 

“டிவி சீரியலில் நடித்தாலும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். தமிழில் நான் நடித்த வாலிப ராஜா திரைப்படத்தின் இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத் தான் அபி டெய்லர்ஸ் டிவி சீரியலையும் இயக்குகிறார். திரைப்படத்தில் பணியாற்றிய அதே படக்குழுவே சீரியலிலும் உடன் பணியாற்ற உள்ளதால் எனக்கு இதுவும் திரைப்படம் போலவே தான் தோன்றுகிறது. அபி டெய்லர்ஸ் டிவி சீரியலில் கதாநாயகன், கதாநாயகி மற்றும் என்னுடைய கதாபாத்திரம் என இந்த மூன்று கதாபாத்திரங்களை மையமாக கொண்டே கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.” 

இயல்பில் நான் ஒரு எளிமையான சுபாவம் கொண்டவள் .ஆனால் இந்த சீரியலில் இருக்கும் இந்த கதாபாத்திரம் மிகவும் அழுத்தமான ஒரு பெண் தொழிலதிபரை மையப்படுத்தி இருப்பதால் எனக்கு மிகவும் சவாலான ஒரு கதாபாத்திரமாக அமைந்துள்ளது. எனவே  தான் இந்த தொலைக்காட்சி தொடரை மிகவும் விரும்பி நடிக்கிறேன்” என சமீபத்தில் அவர் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சோனாவின் சின்னத்திரை வருகை  மிகுந்த எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.