“கருப்பு பூஞ்சை மருந்து பற்றி, மத்திய அரசுக்கு 3 கேள்விகளை முன்வைத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2 வது அலையானது, முதல் அலையைக் காட்டிலும் மிகப் பெரிய பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

இதனால், அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளும், அதிக எண்ணிக்கையிலான உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த பாதிப்புகளுடன், சமீபத்தில் வெளியான பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்பில், “கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில், இந்தியாவின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன் படி, “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, 7.3 சதவிகிதமாக நடப்பாண்டில் பதிவாகி இருக்கிறது.

அத்துடன், “இந்த பொருளாதார பாதிப்புகள் இன்னும் பெரிய அளவில் இருந்திருக்கும் என்றும், ஆனால் மத்திய அரசின் துரிதமான நடவடிக்கைகளால், அது குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது” என்றும், மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டது.

நாட்டில் தற்போதைய சூழலில் பல மாநில அரசுகள் கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த, தீவிரமான கட்டுப்பாடுகளை தங்களது மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, சிறுகுறு தொழிலைச் சார்ந்த தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த பாதிப்பே, மத்திய அரசு வெளியிட்ட நடப்பாண்டு பொருளாதார அறிக்கையில் எதிரொலித்து உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் குறைந்தப்பட்ட வளர்ச்சி, அதிகபட்ச வேலை வாய்ப்பின்மை நிலவி வருவதாகவும்” தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

மேலும், “கருப்பு பூஞ்சையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு இது வரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ள ராகுல்காந்தி, “எபிடெமிக் நோயான இந்த கருப்பு பூஞ்சை தொற்றைப் பற்றி, மத்திய அரசு சில விஷயங்களை, விளக்கமாக சொல்ல வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளார்.

அதன் படி, “கருப்பு பூஞ்சை தொற்றைக் குணப்படுத்தும் ஆம்போடெரிசின் பி வகை மருந்தின் மீதான தட்டுப்பாட்டைத் தடுக்க, மத்திய அரசு என்ன செய்துள்ளது? என்றும், இதனைப் பெற நினைக்கும் ஒரு சாமானியர், அதைப் பெற நினைத்தால் அதற்கான வழிமுறைகள் என்ன?” என்றும், அடுத்தடுத்து கேள்வி எழுப்பி உள்ளார்.

அது போல், “கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் வழி முறைகள் என்ற பெயரில் மக்களைத் தொந்தரவு செய்வது ஏன்?” என்றும், ராகுல் காந்தி காட்டமாகவே கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனிடையே, “ ஆம்போடெரிசின் பி மருந்தின் மீதான தட்டுப்பாடு பற்றி” நேற்றைய தினம் டெல்லி உயர் நீதிமன்றம் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.