பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலும் 3 பள்ளிகளுக்கு, மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

“தமிழக பள்ளிக்கூடங்களில் இப்போது என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?” என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

சென்னை கே.கே. நகரில் உள்ள புகழ்பெற்ற பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், சக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்து 
குற்றச்சாட்டில், போக்சோ சட்டத்தின் கீழ் அவர் அதிரடியாக சிறையில் அடுக்கப்பட்டு உள்ளார். இதே போல், சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்து உள்ளன. இது குறித்து தீவிரமாக விசாரிக்க மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

அத்துடன், சென்னையில் 3 வதாக சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என்பவரும் விளையாட்டு வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

4 வது சம்பவமாக, சென்னை பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் தற்காப்புக் கலை பயிற்சியாளர் மீது, அந்த பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில், அவர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான பாலியல் புகார்களுக்கு மத்தியில் தான், 5 வது சம்பவமாக, சென்னை எம்ஆர்சி நகரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக, முன்னாள் மாணவர்கள் கிட்டதட்ட 900 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, பரபரபரப்பான புகார் அளித்து உள்ளனர்.

இந்த பாலியல் குற்றச்சாட்டுச் சம்பவத்தில், ஏற்கனவே 4 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது மேலும் 3 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதாவது, சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் தொல்லை விவகாரத்தில், போலீசார் புதிய தொலைப்பேசி எண்களை வெளியிட்டு,  பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தனர். அதன் படி, அடுத்தடுத்து 40 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. 

அந்த வகையில், தமிழகத்தின் பிற பள்ளிகளில் இருந்து மாணவிகள் அளித்துள்ள பாலியல் புகாரின் அடிப்படையில், தற்போது மேலும் 3 பள்ளிகளுக்கு, மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதன் படி, சென்னை அடையாறில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி, இந்த பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளது.

இதே போல், சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியும், இந்த பாலியல் புகாரில் சிக்கி இருக்கிறது.

முக்கியமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கித் தவிக்கின்றன. இந்த 3 பள்ளிகளுக்கும், ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சம்பந்தப்பட்ட இந்த 3 பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் ஆணையம் முன்பாக நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், குறிப்பிட்ட 3 பள்ளிகளுக்கும் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.