“நடிகை சாந்தினி என் கணவர் மீது அவதூறு பரப்புவதால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி 
ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் வழக்கிற்கு இணையாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, பிரபல நடிகை சாந்தினி அளித்த பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டு தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

குறிப்பாக, “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகாரில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாகக் கணவன் - மனைவியாக வசித்து வந்தோம் என்றும், என்னைக் கர்ப்பமாக்கி விட்டு, கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை கருக்கலைப்பு செய்ய வைத்து விட்டார்” என்றும், பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். 

முக்கியமாக, “என்னை, எனக்கே தெரியாமல் அந்தரங்கமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதனை வைத்து என்னை மிரட்டியதாகவும், இது தொடர்பான வாட்ஸ்ஆப் சாட்டிங் ஆதாரங்கள் மற்றும் வீடியோ - ஆடியோ ஆதாரங்களை, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நான் சமர்ப்பித்துள்ளேன்” என்றும், கூறியிருந்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு அப்போது தொலைப்பேசி மூலமாக விளக்கம் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், “துணை நடிகை சாந்தினி எனக்கு யார் என்றே தெரியாது என்றும், பணம் பறிக்கும் நோக்கில் இவர் இவ்வாறு செயல்படுகிறார் என்றும், 3 கோடி ரூபாய் கேட்டு அவர் சார்பில் எனக்கு மிரட்டல் வந்தது” என்றும், பகிரங்கமாக எதிர் குற்றச்சாட்டை சுமத்தி, தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார்.

இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது “கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ்” அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து” அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். எனினும் அவர் தற்போது வரை தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரபல நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல் துறையினர் திட்டமிட்டு உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி, மதுரையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர், ராமநாதபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக்கை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில், “எனது குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடும், எங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கத்தோடும், துணை நடிகை சாந்தினி தனது கணவர் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளதாக” குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “எனது கணவர் மீது நடிகை சாந்தினி அவதூறு பரப்புவதால், எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், அதனால் நடிகை சாந்தினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி, அந்த புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி கொடுத்த புகாரை, மதுரை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து, அங்கிருந்து சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்பி, புகாரை விசாரிக்கும்படி பரிந்துரை செய்துள்ளதாக எஸ்.பி. கார்த்திக் தெரிவித்துள்ளார். 

இதனால், சற்று ஓய்ந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு, தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.