“ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி” பெற்றதாக, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்தாண்டு பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், கடந்த ஆண்டு ஒன்று வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும், 10 மற்றும் 11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் எதுவுமின்றி, தேர்ச்சி பெற்றதாக” தமிழக அரசு அறிவித்திருந்தது.

தற்போது, அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 2 வது அலையாகப் பரவிக்கொண்டு இருக்கும் நிலையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மிக கடுமையான கடப்பாடுகள் விதிக்கப்பட்ட உள்ளன. இதன் காரணமாக, பள்ளிகள் அனைத்திற்கும் முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டன. 

அத்துடன், பல பள்ளிகளில் மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், “தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்” பெற்றதாக அறிவித்து, தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 8 வகுப்பு முடியும் வரையில் எந்த ஒரு மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக்கூடாது என்றும், அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்” எனக் கூறப்பட்டு உள்ளது. 

“அதனடிப்படையில், அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து வகை பள்ளிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளதாக” அவர் கூறியுள்ளார்.

“கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்பொழுது ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்தும் விரைவில் தெரிவிக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, “தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது?” என்பது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் பள்ளிக் கல்வித்துறை துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பு இன்றே வெளியாகும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.