பிரபல நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல் துறையினர் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் தற்போது பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் வழக்குதான் ஹாட் டாப்பிகாக இருந்து வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பிரபல நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரும் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல நடிகை சாந்தினி, பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, மோசடி செய்ததாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

“இப்படியாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடனான இந்த காதல் வாழ்க்கையில், அடுத்தடுத்து 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைக்கப்பட்டதாகவும், நான் சார்ந்த அந்தரங்க புகைப்படங்களை எனக்குத் தெரியாமல் எடுத்து, எனக்கே மிரட்டல் விடுத்ததாகவும்” அடுக்கான குற்றச்சாட்டுக்களை, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராகப் பிரபல நடிகை சாந்தினி புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி, சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதாவது, “கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு” செய்யப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்பட்ட நிலையில், போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். எனினும், அவர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், “நடிகை சாந்தினிக்குக் கட்டாய கருக்கலைப்பு செய்த மருத்துவர் யார்?” என்பதைக் கண்டறிந்து, அவருக்குச் சம்மன் அனுப்பவும், போலீசார் தற்போது முடிவு செய்து உள்ளனர். இதனால், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல், பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்ட காரணத்திற்காக, “நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும்” போலீசார் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், நடிகை சாந்தினி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராகக் கொடுத்த வீடியோ புகைப்பட ஆதாரங்களை, சைபர் கிரைம் காவல் துறையினர் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, நடிகை சாந்தினியை மணிகண்டனுக்கு அறிமுகம் செய்து வைத்த பரணி என்ற நடிகரையும், காவல் துறையினர் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.

இப்படியாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் சென்னை காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அத்துடன், நடிகை பாலியல் புகார் வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.