கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் மக்கள் பலர் நோயால் பாதிப்புக்குள்ளாகி  வருகிறார்கள். நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்த நிலையில் நோய் தடுப்பு வழிமுறைகளில் ஒன்றாக தடுப்பூசி  இறக்குமதி செய்யப்பட்டு அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில் இன்றும் மக்கள் சிலர் தடுப்பூசியின் மீதான சில குழப்பங்களும் பயமும் கொண்டுள்ளனர். .

இதனை கருத்தில் கொண்டு பல பிரபலங்களும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு அது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தடுப்பூசி எடுத்துக்கொண்டார். தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட உடன்  அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மக்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்   வகையில் பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் “நான் என்னுடைய முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். நீங்கள் அனைவரும் எடுத்துக் கொண்டீர்களா? ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் இந்த கவலைக்கிடமான பேரிடர் காலத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகள் மிகவும் அவசியமானது.”என பதிவிட்டுள்ளார். 

மேலும் தடுப்பூசி பற்றிய நிறைய குழப்பங்களுக்கு ஆளான தன்னை சரியான முறையில் வழிநடத்திய  மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு வீடியோவின் மூலம் மக்களுக்கான  நோய்த்தடுப்பு விழிப்புணர்வு பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு  மக்களிடையே இருக்கும் தடுப்பூசி பற்றிய குழப்பங்கள் மற்றும் பயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த செயல் பலராலும் வெகுவாக பாராட்டப்படுகிறது.