திருமண ஆசைகாட்டி 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காதலனை, போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

சென்னை அடுத்து உள்ள திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலையில் குடியிருக்கும் 14 வயது சிறுமி ஒருவர், தனது தாயாருடன் தனியாக வசித்து வந்தார்.

தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பள்ளிக்குளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, 9 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அந்த 14 வயது சிறுமி, தனது தாயாருடன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அப்போது, அந்த சிறுமிக்கும் சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சுபாஷ் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த காதலனுடன் அந்த சிறுமி அடிக்கடி பேசி வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அப்போது, அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறிய அந்த காதலன், அந்த சிறுமியின் மனதில் அதிக நம்பிக்கையை விதித்திருக்கிறார்.

குறிப்பாக, அந்த 14 வயது சிறுமிக்குத் திருமண ஆசைகாட்டி, சிறுமியை நம்ப வைத்து, அங்கிருந்து கடத்திச் சென்று, அந்த காதலன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 31 ஆம் தேதி வீட்டின் அருகே இருக்கும் கடைக்குச் சென்று விட்டு வருவதாக வீட்டில் இருந்து கிளம்பிய சிறுமி, அதன் பிறகு வீடு திரும்பவே இல்லை. 

சிறுமி, கடைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அந்த கடைக்குச் சென்று விசாரித்து உள்ளார். அப்போது, சிறுமி அங்கு வரவில்லை என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிறுமியின் தோழிகள் வீட்டில், சிறுமியின் தாயார் சென்று விசாரித்து உள்ளார். ஆனால், எங்குத் தேடியும் சிறுமி இருக்கும் இடம் தெரியாமல், அந்த தாய் தவித்துப்போனார்.

இதனையடுத்து, வேறு வழியில்லாமல், அங்குள்ள திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில், சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.

இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீதாலட்சுமி தலைமையிலான காவல் துறையினர், சிறுமி மாயமானது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இந்த தீவிர விசாரணையில். எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சுபாஷ் என்ற இளைஞன் தான், மயமான அந்த 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. 

இதனையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து, மாயமான சிறுமி மற்றும் காதலன் சுபாஷ் ஆகியோரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

அப்போது, காதலன் சுபாஷ் பிடியிலிருந்த சிறுமி இருக்கும் இடம் தெரிந்து அங்குச் சென்ற போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டனர். அதன் பின்னர், காவல் துறையினர் சுபாஷை பிடித்துக் காவல் நிலையம் அழைத்து வந்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், “திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்தி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தது” தெரிய வந்தது.

இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் காதலன் சுபாஷை கைது செய்தனர். பிறகு, காதலன் சுபாஷை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொன்னேரி கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.