தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் குட்டி ஸ்டோரி. இதில் விஜய்சேதுபதி மற்றும் அதிதி பாலன் பகுதியை நலன்குமாரசாமி இயக்கியுள்ளார். கௌதம் மேனன் மற்றும் அமலாபால் பகுதியை கெளதம் மேனன் இயக்கி உள்ளார். மேலும் வருண், மேகா ஆகாஷ் பகுதியை விஜய்யும், சாக்சி அகர்வால் பகுதியை வெங்கட்பிரபுவும் இயக்கி உள்ளார்கள். 

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படம் தொடர்பான ப்ரோமோ வேல்ஸ் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்கள் முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

பிப்ரவரி 12-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எல்லோர் மனதிலும் எக்காலத்திலும் நீங்காது இடம்பிடித்திருப்பது காதல் கதைகள்தான். அப்படியான ஒரு காதல் கதையைத் தயாரிக்க வேண்டுமென மிக நீண்ட காலமாக நினைத்திருந்தேன். அந்த வகையில் மிக அழகானதொரு தயாரிப்பாக இந்தப் படம் அமைந்திருப்பது மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முன்பு கூறியிருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

ட்ரைலர் ஆரம்பிக்கும்போதே காக்டெய்ல் காதல் கதை என்று ஆரம்பிக்கிறது. யங் கெளதம் மேனன், சற்றே மெலிந்து காட்சியளிக்கும் விஜய் சேதுபதி, உனக்கு என்னை பிடிக்குமா ? உன் பொண்டாட்டியை பிடிக்குமா ? என்று மிரட்டல் கேள்வி கேட்கும் அதிதி பாலன், காதலில் உருகும் மேகா ஆகாஷ், சாக்‌ஷி அகர்வால் என அத்தனை பேர் நடித்திருந்தாலும் அதிகம் கவனம் ஈர்ப்பது விஜய் சேதுபதியும், அமலா பாலும்தான். நான்கு விதமான காதல் கதைகளுமே வித்தியாச கதைக்களத்தை கொண்டது என்று ட்ரைலர் உணர்த்துகிறது. 

இந்நிலையில் படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி செய்வது போல் கெளதம் மேனனின் காட்சிகள் அமைந்துள்ளது. இந்த ஸ்னீக் பீக்கில் ரோபோ ஷங்கரின் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அமலா பால் மற்றும் வினோத் கிஷன் நடித்துள்ளனர்.