“பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை அதிமுக வழங்கி வருகிறது” என்று, முதலமைச்சர் பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்து உள்ளார். 

சென்னை மயிலாப்பூர் பகுதியில் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 

சென்னையில் கொளுத்தும் வெயிலிலும் அசோக் நகர், தியாகராயநகர் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பொது மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, பொது மக்கள் முன்னிலையில் பேசிய முதலமைச்சர், “அதிமுக ஆட்சியில் தான், சென்னையில் குற்றச் செயல்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டார்.

“குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு, சென்னையில் மட்டும் இது வரை இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்” அவர் கூறினார்.  குறிப்பிட்டார்.

“மேயராக இருந்த மு.க.ஸ்டாலின், சென்னை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவில்லை என்றும், ஆனால் சட்டமன்றத்தில் சென்னை மக்களின் அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை என்று கேள்வி மட்டும் எழுப்புகிறார்” என்றும், முதலமைச்சர் விமர்சனம் செய்தார்.

“அதிமுக ஆட்சியில் தான் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதை அகற்றச் சென்னையில் மட்டும் 954 கிலோ மீட்டர் நீள மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது என்றும், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும்” தெரிவித்தார். 

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்” முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார். 

அத்துடன், “சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக உயர்தர மருத்துவ கருவிகளை வழங்கி இருக்கிறோம் என்றும், இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு” என்றும், பெருமையோடு குறிப்பிட்டர்.

மேலும், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை எடுத்தோம் என்றும், அந்த பரிசோதனைக்குச் செலவு அதிகம் ஆனது என்றும்,  எங்களுக்குத் தமிழ்நாட்டு மக்களின் உயிர் தான் முக்கியம், பணம் முக்கியமில்லை என்பதால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை எடுத்தோம். அதில் நோய் அறிகுறி தென்பட்டால் உரிய சிகிச்சை அளித்து அவர்களை குணமடையச் செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்” என்றும், முதலமைச்சர் நினைவு கூர்ந்தார். 

“மழை மற்றும் புயல் வந்தாலும் சென்னை மாநகர மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு பூமிக்கு அடியில் மின் பாதை அமைத்து கேபிள் மூலம் மின்சாரம் கொடுக்கின்றோம் என்றும், மழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் கொடுக்கின்றோம். அதனால் புதிய புதிய தொழிற்சாலைகள் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றன” என்றும், பெருமையோடு கூறினார் முதலமைச்சர்.

குறிப்பாக, “நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு, அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படுகிறது என்றும், பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியை அதிமுக வழங்கி வருவதாகவும்” முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்தார்.