“அதிமுக முகக்கவசத்தைக் கழட்டினால் பா.ஜக, ஆர்எஸ்எஸ் இருக்கும் என்றும், அதிமுகவை ஆர்எஸ்எஸ் - பாஜகவே இயக்குகிறது” என்றும், ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, விழாவில் பேசிய ராகுல் காந்தி, “இந்த தேர்தல் இரண்டு அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் கிடையாது என்றும், நாம், தமிழ் கலாச்சாரம் மீது ஒரு 
முழுமையான தாக்குதலைச் சந்தித்து வருகிறோம்” என்றும் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், “இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள், மதங்கள், மொழிகளின், மாநிலங்களின் ஒருங்கிணைப்பு என்றும், எந்த ஒரு மொழியோ, கலாச்சாரமோ ஒன்றை விட மற்றொன்று உயர்ந்தது அல்ல என்றும்; அனைத்து மொழிகளும், பண்பாடுகளும், பழக்க வழக்கங்கள் தான் இந்தியாவை உருவாக்கியுள்ளது” என்றும் குறிப்பிட்டார். 

“அதே நேரத்தில், நாடு முழுவதும் ஒரே மொழி என்பதை ஏற்க முடியாது” என்றும், வெளிப்படையாகவே ராகுல் காந்தி பேசினார்.

குறிப்பாக, “எல்லோரும் முககவசம் அணிந்திருப்பதால் சிரிக்கிறார்களா என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும், ஆனால் பழைய அதிமுக இப்போது 
இல்லை என்றும், அதிமுக முககவசத்தை கழட்டினால் ஆர்எஸ்எஸ், பாஜக முகம் இருக்கும்” என்றும், ராகுல் காந்தி மிக கடுமையாக விமர்சித்தார்.

“ஒரு தமிழரும் மோடியின் முன் தலை குனிய விரும்புவதில்லை என்றும், அப்படி இருக்கும் போது, தமிழக முதலமைச்சர் அமித்ஷா, மோடியின் முன்பு தலை குனிந்து நிற்பது ஏன்?” என்றும், ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளிக்கும் விதமாகத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி “ஏனென்றால், மத்திய அரசு புலனாய்வுத் துறையை கையில் வைத்துள்ளது. தவறு செய்தவர்கள் அவர் முன் தலை குனியவேண்டிய நிலையில் உள்ளனர்” என்றும், விமர்சனம் செய்தார். 

“ஆனால், அதற்கான விலையை நீங்கள் கொடுக்கவேண்டி வரும் என்றும், எந்த ஒரு மனிதன் தமிழ்நாட்டின் பண்பாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளாரோ, அவர் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும், நீங்கள் அனுமதித்ததால் தான் இந்த நாடே இயங்கிக் கொண்டிருக்கிறது” என்றும், ராகுல் காந்தி கூறினார்.

மிக முக்கியமாக, “உங்களுடைய பண்பாடும், வரலாறும் தனிச்சிறப்பானது என்றும், உங்களுக்கு இணையாக யாரும் இருக்க முடியாது என்பதை என்னால் உணர முடிகிறது என்றும், உங்கள் நம்பிக்கைகளை நான் மதிக்கிறேன், நம்புகிறேன்” என்று கூறிய ராகுல் காந்தி, “அதே நேரத்தில், உங்கள் பண்பாட்டின் மீதான தாக்குதலை நீங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நான் நம்புகிறேன்” என்றும், என்றும், உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

“மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“இந்தப் போர் இத்துடன் முடிவதில்லை என்றும், ஆர்எஸ்எஸ் - பாஜகவும் தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் தடுத்து விட்டால், மீண்டும் நுழையமாட்டார்கள் என்பது கிடையாது. மீண்டும், மீண்டும் முயற்சிப்பார்கள்” என்றும், ராகுல் கவலைத் தெரிவித்தார்.

“முதலில் தமிழ்நாட்டிலிருந்து அவர்களைத் துரத்திவிட்டு, டெல்லியில் இருந்தும் அகற்ற வேண்டும்” என்றும், ராகுல் சூளுரைத்தார். 

“ஒவ்வொரு மாநிலமும் இது போன்ற பாதிப்பில் அகப்பட்டுத் தவிக்கிறது என்றும், ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார். 

“அமைப்புகள் அழிக்கப்படுகிறது, சிலருக்குப் பணம் சேர்வதற்காக, நம்முடைய பண்பாட்டினை விலை கூறும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இந்த 2 
போராட்டங்களிலும் அவர்கள் நிச்சயம் வெல்ல முடியாது” என்றும், ராகுல் காந்தி உறுதிப்படத் தெரிவித்தார்.

“விவசாயிகளைப் பாதிக்கும் 3 விவசாய சட்டங்களை ஏன் நிறைவேற்றினீர்கள்? என, மோடியிடம் கேட்கத் தைரியம் இல்லாதவராக இருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி என்றும்; அமித்ஷாவும், மோடியும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என இந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கொடுத்துள்ளார்” என்றும், ராகுல் காந்தி மிக கடுமையாகச் சாடினார்.

“நான் தமிழ் தெரிந்தவன் அல்ல, ஆனால் உங்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்ளக் கூடியவராக இருக்கிறேன். உங்களின் மொழி, பண்பாடு மீது தொடுக்கும் போரை ஏற்க மாட்டீர்கள் என நான் நம்புகிறேன்” என்றும், ராகுல் காந்தி தெரிவித்தார்.

“தமிழர்களின் வரலாறும், பண்பாடும் சிறந்தது, தமிழர்களுக்கு நிகராக யாரும் இருக்க முடியாது என்பதை உணரலாம். தமிழ் கலாச்சாரம், மொழி, வரலாற்றின் மீது முழுமையான தாக்குதலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இந்த தாக்குதலை முறியடிப்பதற்கான தேர்தல் இது” என்றும், ராகுல்காந்தி சூளுரைத்தார்.