தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது படங்கள் பல தேசிய விருதுகளைப் பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 67-வது தேசிய திரைப்பட விருதுகளில் வெற்றிமாறனின் அசுரன் படம் இரண்டு விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்தது. 

இந்நிலையில் சமீபத்திய ஆன்லைன் பேட்டியில், தளபதி விஜய்யுடன் தான் இணைவதை உறுதிப்படுத்தியிருக்கிறார். தளபதி விஜய்யின் 65-வது படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் ஆச்சர்யப்படும் விதமாக விஜய், இயக்குனர் நெல்சன் திலிப்குமாருடன் கைகோர்த்தார்.

ஆனால் வெற்றிமாறன், விஜய்யை இயக்கும் வாய்ப்பை தனது முன்கூட்டிய ஒப்பந்தங்கள் காரணமாக இழந்தார். அதனால் இப்போது தனது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, விஜய்க்காக காத்திருக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்த மாஸ் கூட்டணிக்காக ரசிகர்கள் பெரிதும் உற்சாகமடைகிறார்கள்.

வெற்றிமாறன் தற்போது சூரி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அதோடு ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்துடன் இன்னொரு படத்திற்கும் ஒப்பந்தமாகியிருக்கிறார். 

இதுதவிர, சூர்யா ஹீரோவாக நடிக்கும் ‘வாடி வாசல்’ படத்தையும் இயக்கவிருக்கிறார். இந்த கமிட்மெண்டுகள் அனைத்தும் முடிந்த பின்னர், விஜய் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.