“என் தாயை பற்றியே எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியுள்ளார் ஆ.ராசா” என்று, பிரசாரத்தின் போது உணர்ச்சிவசப்பட்டு முதலமைச்சர் பழனிசாமி தழுதழுத்த குரலில் பேசி கண்கலங்கினார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சரின் தாயாரைத் தரக்குறைவாகப் பேசியதாகச் செய்திகள் வெளியானது. இது, தொடர்பான செய்தி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆ. ராசா தேர்தல் பரப்புரை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று, அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஆ.ராசா மீது மத்திய குற்றப் பிரிவு காவல் துறை, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஜெயக்குமாருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பொது மக்கள் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பதில், தமிழகம் தான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது” என்று, குறிப்பிட்டார்.

“நான் கிராமத்தில் இருந்து வந்துள்ளதால், என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று ஸ்டாலின் நினைத்து விட்டார் என்றும், ஆனால் நான் எதை நினைத்தாலும் சாதிப்பேன் என்றும், எதற்கும் அஞ்சமாட்டேன்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி காட்டமாக பேசினார்.

இதனையடுத்து, சென்னை திருவொற்றியூர் சட்டப் பேரவைத் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது. “ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து பொய் பேசி, நாடகம் ஆடி வருவதாக” குறிப்பிட்டார். 

அத்துடன், “அவர், தந்திரமாகப் பேசி மக்களைக் குழப்பி வருகிறார் என்றும், ஆனால் மக்கள் தெளிவுடன், அதிமுக அரசு அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “நான் முதலமைச்சராக இருக்கின்றேன். நான் இதைப் பற்றிப் பேசக் கூடாது என்று தான் வந்தேன். இந்த தாய்மார்களைப் பார்த்ததால் இப்போது பேசுகின்றேன்” என்று, தழுதழுத்த குரலில் பேசிய முதலமைச்சர், “என் தாய் என்று பார்க்காதீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு தாயாகப் பாருங்கள். எவ்வளவு கீழ்த்தரமாகப் பார்க்கின்றார், பேசுகிறார்” என்று, கேள்வி எழுப்பினார்.

“ ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் என்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். ஒரு முதலமைச்சருக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால், உங்களைப்போன்ற மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள்” என்றும், அவர் கேள்வி எழுப்பினார். 

“இவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், இந்தப் பெண்கள் மற்றும் தாய்மார்களின் நிலைமை என்ன ஆகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எனக்காக நான் பேசவில்லை. தயவு செய்து, அவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையை நீங்கள் வழங்க வேண்டும்” என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். 

“என்னுடைய தாய் கிராமத்திலேயே பிறந்து, வளர்ந்தவர். அவர் விவசாயி, இரவு, பகல் பாராமல் பாடுபட்டவர். அவர் இறந்து விட்டார். அவரைப் பற்றி இழிவாகத் தரக்குறைவாக எப்படி எல்லாம் பேசி இருக்கிறார்” என்று, மீண்டும் நா தழுதழுக்கப் பேசினார்.

“ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலைமை. நான் நினைத்தால் சாதிக்க முடியும். ஆனால், நான் அப்படி அல்ல. ஒரு சாதாரண குடும்பத்தில் உங்களைப் போல பிறந்து வளர்ந்தவன். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் தாய் தான் உயர்ந்த ஸ்தானம்” என்றும், மக்கள் முன்னிலையில் அவர் கண் கலங்கினார். 

குறிப்பாக, “யார் பெண் குலத்தை இழிவாகப் பேசினாலும், தாயை இழிவாகப் பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையைத் தருவார் என்றும், 
இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் வந்து விட்டால் எப்படி அராஜகம் செய்வார்கள் என்று பெண்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.