“முதலமைச்சர் பழனிசாமியிடம் மனம் திறந்த மன்னிப்பு கோருகின்றேன், எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன்” என்று, திமுக எம்.பி. ஆ.ராசா வருத்தம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக எம்.பி.யுமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி இழிவாகப் பேசியதாகப் புகார்கள் எழுந்தன. ஆ.ராசாவின் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால், ஆ.ராசாவின் பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, முதலமைச்சர் பற்றித் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தமைக்காக, ஆ.ராசா மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. 

அந்த புகார் மனு உரிய நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த புகார் மனு அடிப்படையில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது இது வரை 3 சட்டப் பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 

இந்த நிலையில், “முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக” ஆ.ராசா கூறியுள்ளார். 

இது குறித்து உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்” என்று, எடுத்ததுமே தெரிவித்துக்கொண்டார். 

“நான் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பெரம்பலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதலமைச்சர் குறித்து நான் பேசியதாக எழுந்த பிரச்சினை குறித்து தன்னிலை விளக்கம் அளித்தேன். என்றாலும், அது குறித்து விவாதம் தொடர்ந்ததால் கூடலூர் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் குறித்தோ அவரது தாயார் குறித்தோ நான் தவறாகப் பேசவில்லை என்றும், நானும் ஒரு தாயின் 8 வது குழந்தை என்கிற முறையில் அப்படித் தவறாகப் பேசவில்லை என்று தெரிவித்தேன்” என்றும், குறிப்பிட்டார்.

“எனினும், முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டுக் கண் கலங்கினார் என்கிற செய்தி அறிந்து, நான் மிகுந்த மன வேதனை அடைகிறேன்” என்றும், ஆ.ராசா கூறியுள்ளார். 

“இடப் பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சு குறித்து, என் மனதின் அடி ஆழத்திலிருந்து நான் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்றும், ஆ.ராசா வெளிப்படையாகவே முதலமைச்சரிடம் மன்னிப்பு கோரினார்.

அத்துடன், “இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால் முதலமைச்சர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணர்ந்தால் அவரிடம் எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் எனக்குத் துளியும் தயக்கமில்லை” என்றும், ஆ.ராசா தெரிவித்து உள்ளார்.

“முதலமைச்சருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும், நடு நிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனம் அல்ல. பொது வாழ்வில் உள்ள 2 அரசியல் ஆளுமைகள் குறித்த ஒப்பீடும், மதிப்பீடும் தான்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார். 

“முதலமைச்சர் பழனிசாமி மனம் காயப்பட்டது குறித்த எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருகிறேன்” என்றும், மீண்டும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

முக்கியமாக, “பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட எனது 40 நிமிட உரையை மக்கள் முழுமையாக கேட்டால், நான் தவறாகப் பேசவில்லை என தீர்ப்பளிப்பர்” என்றும் ஆ.ராசா, மீண்டும் ஒருமுறை பதிவு செய்துகொண்டார்.