“ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை ஏற்படுத்துவேன்” என்று, திமுக வேட்பாளர் எழிலன் வாக்குறுதியால் புதிய சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிரும் நடிகை குஷ்புக்கு அவை சாதகமாக அமைந்து உள்ளன. 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள திமுக வேட்பாளர் எழிலன், கொடுத்துள்ள தேர்தல் அறிக்கையில் நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய விஷயத்தைக் கூட மறந்து குறிப்பிட்டுள்ளது, சமூக வலைத்தளங்களில் கேலி கூத்தாக மாறி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

அதாவது, காவல் துறையில் தன்னாவர்களே வந்து உதவி செய்வதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கொண்டுவரப்பட்ட ஒரு அமைப்பு தான் ஃப்ரன்ஸ்
ஆஃப் போலீஸ். கடந்த 1993 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. 

இதற்கு காரணம், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டு காவல் நிலையத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அவர்கள் இருவரும் உயிரிழக்க ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதன் காரணமாக ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் குழுவை தடை செய்ய டிஜிபி திரிபாதி தமிழக அரசு பரிந்துரைத்தார். அதனடிப்படையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை விதித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு தடை செய்த ஒரு அமைப்பை மீண்டும் கொண்டு வருவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் திமுக வேட்பாளர் எழிலன். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் எழிலன் போட்டியிடுகிறார். 

பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாள்தோறும் தொகுதி மக்களை சந்தித்து அவர்களுடன் ஒன்றாக பழகி வரும் நடிகை குஷ்புவுக்கு, ஆதரவுகள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன் தினம் குஷ்பு தனது தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் எனவும் மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் வாக்குறுதிகளை அளித்தார். 

நடிகை குஷ்புவின் இந்த வாக்குதிகளை பார்த்து சற்று யோசித்த எழிலன், பெயருக்கு தான் பங்கிற்கு வாக்குறுதிகளை அளிப்போம் என எதையோ சொல்லி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டார் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

அதன் படி, “12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும், 100 மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க ஊக்கத் தொகை வழங்கப்படும், தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கு என அவர்கள் குடியிருப்புக்கு அருகே தனிக்கழிவறை கட்டித்தரப்படும், ஆயிரம் விளக்கு தொகுதியில் இலவச Wi-Fi வசதி ஏற்படுத்தித்தரப்படும் என்றவர் இறுதியாக இடியை தூக்கி போட்டிருக்கிறார்.

அதாவது, “மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை ஏற்படுத்துவேன்” என கூறியுள்ளார். 

இந்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைப்பால் ஆங்காங்கே மக்களுக்கு தொந்தரவு ஏற்படுவது மட்டுமின்றி, அடியாட்கள் போல பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பிற்கு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்ட நிலையில், இந்த தகவல் கூட அறியாமல் மீண்டும் அந்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்து திமுகவின் எழிலன் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார் என்றும் இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.