மேற்கு வங்கத்தில் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.


மறுபக்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பலர் திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இதுவரை 19 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். 


 இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி, ‘’ இன்னும் எத்தனை பேர் வேண்டுமானலும் கட்சியிலிருந்து விலகட்டும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நான் தனியாக இல்லை. எனக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. 


மேற்கு வங்கத்தை பாஜக சீர்குலைக்க நினைக்கிறது. நான் உயிருடன் இருக்கும் வரை, மேற்கு வங்கத்தில் பாஜகவை அனுமதிக்க மாட்டேன். மாநிலத்தில் கலவரத்தை ஊக்குவிக்க விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள். கலவரங்களை விரும்புகிறவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றார்