“விவசாயிகளுடன் பாஜக போர் தொடுக்கிறதா?” என்று, பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். 

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தையில் இதுவரை எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால், விவசாயிகள் தங்கள் உயிரையும் துச்சம் என மதித்து தொடர்ச்சியாகப் போராட்ட களத்தில் குதித்து உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில், பெரும் வன்முறை மூண்டது.

டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் செங்கோட்டைக்குள் சென்று, அங்கு கொடி ஏற்றினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது, அப்போது, பெரும் கலவரம் வெடித்ததாகவும் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த கலவரத்தில் விவசாயிகள் கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து விட்டதாகவும், அவர்கள்தான் கலவரத்தை நடத்தினார்கள் என்றும், உண்மையாகப் போராடும் சக விவசாயிகளும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்நிலையில், டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பல விதமான தடுப்புகளை அமைத்து, யாரும் அந்த பகுதியைக் கடந்து உள்ளே வராத வகையில், பாதுகாப்பை போலீசார் மேலும் பலப்படுத்தி உள்ளனர். 

குறிப்பாக, டெல்லி - உத்தரப் பிரதேச மாநில காசிபூர் எல்லையில் தடுப்புச்சுவர் அருகில், சாலையில் ஆணிகளை வைத்து டெல்லி போலீசார் பாதுகாப்பை மிகவும் ஆபத்தான முறையில் செய்திருக்கின்றனர். 

சிங்கு எல்லையில் சிமெண்டு தடுப்புகள், இரும்பு கம்பிகளால் முற்றிலுமாக பிணைக்கப்பட்டு உள்ளன. டெல்லி - அரியானா எல்லையில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தற்காலிக சுவர் முழுவதுமாக எழுப்பப்பட்டு உள்ளது. காசிப்பூர் எல்லையில், பல அடுக்கு தடுப்புகளுடன் முள்வேலிகளும் போடப்பட்டுள்ளன. இவை தவிர, சாலைகளில் பெரிய ஆணிகளையும் போலீசார் பதித்து வைத்துள்ளது கொடூரத்தின் உச்சம்.

இது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், “விவசாயிகளுடன் பாஜக போர் தொடுக்கிறதா?” என்று, பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 

“டெல்லியுடனான உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியில் தடுப்பு வேலி அமைத்து விவசாயிகளை உள்ளே நுழைய முடியாதவாறு செய்து உள்ளனர் என்றும்,  டெல்லி - ஹரியானா எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கிடையே இரும்பு கம்பியை இணைந்து போராட்டக்காரர்களின் நடமாட்டத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து உள்ளது” வேதனை அளிக்கும் வகையில் உள்ளது” என்றும், அவர் கவலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு, பிரியங்கா காந்தி சரமாரியாக எழுப்பி உள்ள கேள்வியானது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அதே போல், இந்த தடுப்புகள், சுவர்களின் புகைப்படங்களைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். 

அதில், “இந்திய அரசே, நீங்கள் பாலங்களைக் கட்டுங்கள், சுவர்களை அல்ல” என்றும், அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மேலும், “அரசாங்கம் என்பது, விவசாயிகளுக்குப் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி தடைக்கல்லாக இருக்கக் கூடாது” என்று, ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மிக முக்கியமாக, “டெல்லியில் தடுப்புவேலிகள் அமைப்பது அதிகரித்து உள்ளது என்றும், அகழிகள் தோண்டப்படுகின்றன என்றும், சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன என்றும், உள் சாலைகள் மூடப்படுகின்றன” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார். 

“இணையதள சேவைகள் நிறுத்தப்படுகின்றன என்றும், பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மூலம் போராட்டங்களுக்குத் திட்டமிடுகிறார்கள் என்றும், இதெல்லாம் அரசாங்கம், போலீஸ் மற்றும் நிர்வாகம் மூலம் விவசாயிகள் மீது நடத்துகிற தாக்குதல் ஆகும்” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

“போராட்ட களங்களில் இணையதள சேவையை நிறுத்துதல், போராடும் விவசாய இயக்கங்களின் டிவிட்டர் கணக்குகளை மூடுதல் போன்றவை ஜனநாயகத்தின் 
மீதான நேரடி தாக்குதல் ஆகும்” என்றும், ராகுல் காந்தி மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.