எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. 

கொரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது கோடை விடுமுறை வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது இந்த படம்.  ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். விரைவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்‌ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மஹா படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறித்து சமீபத்தில் ஹன்சிகா பதிவு செய்திருந்தார். 

அவரது பதிவில், என்னுடைய 50வது படமான மஹா உடனான தனித்துவமான பயணம் இது. இப்படத்தில் ஆத்மார்த்தமாக வேலை செய்த என்னுடைய சக நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படம் உருவாகும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டிருந்தார். 

ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் கூறுகையில், படத்தின் காட்சிகள் உருவான விதத்தை பார்க்கையில், நிச்சயம் சிம்பு ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் முதல் முறையாக சிம்பு இந்த படத்தில் பைலட் வேடத்தில் நடித்துள்ளாராம். 

இந்நிலையில் இன்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, சிலம்பரசன் டப்பிங் பேசும் வீடியோவை ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். இதில் பிரேக்கப் குறித்து சிம்பு டப்பிங் செய்திருப்பது ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.