ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் அஜித் பங்கேற்கவுள்ளார். போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு நீண்ட தூர பைக் பயணத்தைத் தொடங்கினார் அஜித். 

தனக்கு மிக நெருங்கிய நண்பர்களுடன் இந்த பயணத்தைத் திட்டமிட்டு இருந்தார். எந்த வழியாக எங்குச் சென்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டது. இடையே, சாலையோர உணவகம் வைத்திருப்பவரின் மகன் படிப்புச் செலவை அஜித் ஏற்றிருப்பதாகச் செய்தி மட்டுமே வெளியானது. தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு, ஹைதராபாத் திரும்பியுள்ளார் அஜித். தன்னுடன் பயணித்த அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

இதில் அஜித்துடன் பயணித்த தினேஷ் குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுக் கூறியிருப்பதாவது: அஜித் அவர்கள், நம்ம தல, சென்னை - கோவை -சென்னை - ஹைதராபாத் - வாரனாசி - காங்டாக் - லக்னோ - அயோத்யா - ஹைதராபாத் - சென்னை என 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர் அஜித் அவர்கள்தான். சுத்தமான தங்கம் என்று தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

இந்தப் பதிவுக்கு ரசிகர் ஒருவர், வீடியோ எடுத்திருந்தால் அதை யூடியூப் தளத்தில் வெளியிடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தினேஷ் குமார், இல்லை, என்றும் கிடையாது. எனக்கு அஜித் அவர்களைத் தெரியும். அவருக்குத் தனிப்பட்டு இருப்பது பிடிக்கும். நாம் அவரை மதிக்கிறோம் என்றால் அவரது இந்த விருப்பத்தையும் மதிக்க வேண்டும். நான் அவருடன் வண்டி ஓட்டியிருக்கிறேன்.

எனது ஹெல்மெட்டில் கேமராவை வைக்கவில்லை. என் மொபைலில் புகைப்படம் எடுக்கவில்லை. இந்த புகைப்படம் அஜித் அவர்களின் சம்மதத்துடன் பகிரப்பட்டுள்ளது. ஒரே மூச்சில் அவர் 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை முடித்துவிட்டார் என்பதை உங்களிடம் சொல்வதற்காக. மற்றவர்கள் 5000 கிலோமீட்டர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரும் அவர் நண்பர்களும் 10,000க்கும் அதிகமாகப் பயணப்பட்டுள்ளனர். அவர் பைக் பயணத்தின் தீவிர ரசிகர்" என்று தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

வலிமை திரைப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. வலிமை படத்தை பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பதாக கூறப்படுகிறது. 

வலிமை படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dinesh Kumar (@dinos_vault)