“உனது வீட்டில் ஒரு நாள் தூங்க வேண்டும்” என்று, பெண்ணிடம் அத்து மீறிய போலீஸ் அதிகாரி ஒருவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி காவல் நிலையத்தில் நரேஷ்குமார் என்பவர், காவலராகப் பணியாற்றி வந்தார். 

நரேஷ்குமார் காவலராக இருந்தாலும், அந்த பகுதியைச் சேர்ந்த தனக்குத் தெரிந்த பெண் ஒருவருடன் சேர்ந்து அதே பகுதியில் யோகா பயிற்சி மையம் நடத்தி வந்தார். 

இப்படியாக, ஒரு பெண்ணுடன் சேர்ந்து நடத்தி வந்த யோக மையம் நல்ல நிலையில் சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென்று அவர்கள் இருவருக்குள்ளும் பண விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. 

இதனால், கடும் ஆத்திரமடைந்த காவலரான நரேஷ்குமார், “உடனே எனது பங்கைப் பிரித்துத் தர வேண்டும்” என்று, அந்த பெண்ணிடம் தகராறு செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அந்த பெண், பின்னர் நிதானத்திற்கு வந்து ஒரு நிரப்பப்படாத காசோலையை அவரிடம் வழங்கி, பணத்தை நிரப்பச் சொல்லி இருக்கிறார். ஆனால், காவலரான நரேஷ்குமார், அதனை வாங்காமல் அந்த பெண்ணிடமே அதனை திருப்பிக் கொடுத்துவிட்டு, வந்து உள்ளார்.

இந்த பிரச்சினை, இப்படியே முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த பெண், அன்று இரவு தூங்கச் சென்றிருக்கிறார்.

அப்போது நள்ளிரவு ஆனதும், அந்த பெண் தனது வீட்டில் குடும்பத்தினரும் நன்றாக ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து உள்ளார். அப்போது, அங்கு மது அருந்திவிட்டு, கடுமையான மது போதையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு மீண்டும் வந்த காவலரான நரேஷ்குமார், பணத்தைக் கேட்டு மீண்டும் அந்த பெண்ணுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. 

ஆனால், காவலரான நரேஷ்குமார், நல்ல போதையில் இருப்பதை உணர்ந்த அந்த பெண், “எதுவாக இருந்தாலும் காலையில் வாருங்கள், பேசிக்கொள்ளலாம்” என்று கூறி, அவரை அங்கிருந்து அனுப்பி வைக்க நினைத்திருக்கிறார்.

ஆனால், மிக கடுமையான மது போதையில் இருந்த காவலரான நரேஷ்குமார், அந்த பெண்ணின் பேச்சைக் கேட்காமல், “ஒரு நாள் உனது வீட்டில் நான் உறங்க வேண்டும். இல்லையென்றால், நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று, அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். 

இதனால், சற்று பயந்துபோன அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளார். இது குறித்து அங்கு விரைந்து வந்த சக போலீசார், காவலரான நரேஷ்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அத்துடன், இது தொடர்பாக அந்த பெண் புகாராகப் பதிவு செய்த நிலையல், அடுத்த சில மணி நேரங்களிலேயே, நரேஷ்குமார் காவல் துறையில் இருந்து அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.