உலகின் பணக்கார நாடாக இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, சீனா தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது சக உலக நாடுகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதல் இந்த உலகமே வேறு விதமாக மாறி இயங்கிக்கொண்டு இருக்கிறது.

கொரோனாவுக்கு முன்பு வரை இருந்த உலக பொருளாதாரம் எல்லாம் தகர்ந்தெரிந்துவிட்டு, கொரோனா என்னும் கொடிய நோய் புதிதாக உலக பொருளாதாரத்தை மாற்றி எழுதியிருக்கிறது.

அந்த வகையில் தான், உலகின் மிகப் பெரிய பணக்கார நாடாக இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இருக்கும் சீனா, தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்கார நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது.

இது தொடர்பாக, ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, “உலகின் முன்னணி பணக்கார நாடுகளான சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா 2 ஆம் இடத்திலும் இருப்பதாக” தெரிவித்து உள்ளது. 

மேலும், “பணக்கார நாடுகள் பட்டியலில், ஜெர்மனி 3 வது இடத்திலும், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும்” பிடித்து உள்ளன. 

குறிப்பாக, உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் 10 நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது.

அதன்படி, உலகளவில் 68 சதவீத சொத்துக்கள் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்து இருக்கிறது. 

அதேபோல், உள்கட்டமைப்பு சார்ந்த சொத்துக்களின் மதிப்பு 11 சதவீதமாகவும் இருக்கிறது.

அதாவது, சீனா உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக ஆவதற்கு முந்தைய கடந்த 2000 ஆம் ஆண்டில், அதன் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டாலராக இருந்தது. 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்தது. இதன் மூலமாக அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளியிருக்கும் சீனா, உலகின் பெரும் பணக்கார நாடாக மாறியிருக்கிறது. 

இதே நேரத்தில், அமெரிக்காவின் சொத்து மதிப்பு 2 மடங்கு உயர்ந்து 90 லட்சம் கோடி டாலராக உள்ளது. 

முக்கியமாக, கடந்த 20 ஆண்டுகளில் உலகின் மொத்த சொத்து மதிப்பு 3 மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் 156 லட்சம் கோடி டாலராக இருந்த உலகின் சொத்து மதிப்பு, கடந்த 2020 ஆம் ஆண்டில் 514 லட்சம் கோடி டாலராக உயர்ந்து இருக்கிறது. இதில் 3 ல் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனாவே முக்கிய காரணமா உள்ளதாகவும், ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் மூலமாக தெரிய வந்திருக்கிறது.