இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்து கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசான திரைப்படம் ஜெய்பீம். மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிகழும் அநீதிகள் குறித்தும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டும் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் ஆழமான கருத்துக்களோடு நேர்த்தியான கலைப்படைப்பாகவும் வெளிவந்து பலரது மனதையும் கவர்ந்ததோடு பாராட்டுகளையும் பெற்றது.

இது ஒருபுறம் இருக்க ஜெய்பீம் திரைப்படத்தின் ஒருசில குறியீடுகள் குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்குவதாக குறிப்பிட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் இதுதொடர்பாக நடிகர் மீது வழக்கு தொடர்ந்துள்ள வன்னியர் சங்கம் 5 கோடி நஷ்ட ஈடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் சூர்யா மற்றும் ஜெய்பீம் திரைப்படத்தின் மீது எழும் இந்த எதிர்ப்புகளின் எதிரொலியாக தமிழ் திரையுலகைச் சார்ந்த முன்னணி இயக்குனர்களும் நடிகர்களும் பிரபலங்களும் நடிகர் சூர்யா உடன் துணை நிற்பதாக ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் #WeStandWithSuriya #WeStandWithJaiBhim  ஹாஷ்டேக் மூலமாக பல கோடி மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவின் புகைப்படத்தோடு “ #WeStandWithSuriya “ என பதிவிட, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,”ஒவ்வொரு தாக்குதல்களும் எங்களை ஆவேசப்படும் அரசியல் படுத்தும் ஒருபோதும் அதிகப்படுத்தாது புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் #WeStandWithSuriya ” என்று பதிவிட்டார். மேலும்,நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டரில்  #WeStandWithSuriya என பதிவிட,  இயக்குனர் வெங்கட் பிரபு “சரியான நியாயத்திற்காக நிற்கும்பொழுது தனித்து நிற்பதில் தவறில்லை  #WeStandWithSuriya ” என பலரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன்,

“பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் உலகறியச் செய்வதில் இயக்குனர் T.J.ஞானவேலின் முனைப்பும்,

திரையிலும் நிஜ வாழ்விலும் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் நடிகர் சூர்யாவின் தொடர் முயற்சியும் ஊக்கமளிக்கிறது.

சமூகத்தில் இருக்கும் சமத்துவமின்மையும் அநீதியையும் கேள்வி கேட்கும் எந்த ஒரு படைப்பும் சமூகநீதிக்கான ஆயுதம்தான்”

என சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.