கணவன் - மனைவி சண்டையில் அடிக்கடி சமாதானம் செய்து வைத்த போலீசுடன் கள்ளக் காதல் ஏற்பட்டதால், கணவனை வெட்டி வீசி விட்டு மனைவி தலைமறைவாகி உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த தேவகான பள்ளி பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத், தனது மனைவி அனிதா மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

அந்த பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வந்த மஞ்சுநாத், தொடக்கத்தில் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். ஆனால், போக போக கணவன் மஞ்சுநாத்திற்கும் அவரது மனைவி அனிதாவிற்கும்  அடிக்கடி குடும்ப பிரச்சனை எழுந்து, அவர்களுக்குள் தகராறாக மாறிப்போனது.

இதனால், கணவன் - மனைவி சண்டையில், கணவன் மீது புகார் கூறுவதற்காக அவரது மனைவி அனிதா, உடனே போலீசுக்கு போன் செய்து தொடர்ந்து புகார் அளித்து வந்திருக்கிறார்.

மனைவி அனிதாவின் புகாரை அடுத்து, வீட்டிற்கு வந்து அடிக்கடி சமாதனம் செய்து வைத்து சென்றிருக்கிறார் அந்த பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர். 

இப்படியாக, அடிக்கடி கணவன் - மனைவி சண்டையில் சமாதானம் பேசி விட்டுப் போனதில், குறிப்பிட்ட அந்த போலீஸ்காரருக்கும் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி இருக்கிறார் கணவன் மஞ்சுநாத்.  

இதனால், இதனை இவரது மனைவி அனிதாவும், சம்மந்தப்பட்ட அந்த போலீஸ்காரரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து,  கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி அன்று அங்குள்ள தளி காவல் நிலையம் முன்பாக லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள மஞ்சுநாத் முயற்சித்திருக்கிறார்.

பின்னர், அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுநாத், தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.

இந்த விசயம், அந்த காவல் நிலையத்தின் உயர் அதிகாரிகளுக்கு சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட அந்த போலீஸ்காரர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இப்படியான சூழ்நிலையில் தான், சான போகன பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மஞ்சுநாத் முகத்தில் வெட்டு காயத்துடன் சடலமாக கிடந்திருக்கிறார்.

இது குறித்து விரைந்து வந்த தளி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “கொலை செய்யப்பட்ட மஞ்சுநாத், வேறு ஒரு பகுதியில் கொலை செய்யப்பட்டு, சடலத்தை இங்கு வந்து வீசி விட்டுச் சென்றிருக்கலாம்” என்று கூறியுள்ளனர்.

முக்கியமாக, “கொலை செய்யப்பட்ட மஞ்சுநாத்தின் மனைவி அனிதா, தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம்” என்றும், போலீசார் சந்தேகிக்கும் நிலையில், போலீசார் அவரை மிகத் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.