நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சைக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புரட்சி பூ மலாலாவுக்கு, எந்த ஆரவாரமும் இல்லாமல் இங்கிலாந்து நாட்டில் தான் மிகவும் எளிமையான முறையில் இந்த திருமணம் நடந்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டைச் பூர்விகமாக கொண்ட 24 வயதான மலாலா,  பெண் குழந்தைகளின் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். 

மலாலாவுக்கு 15 வயது இருந்த போதே, அவரை கடந்த 2012 ஆம் ஆண்டு தலிபான்கள் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மலாலாவின் கழுத்தி குண்டு பாய்ந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமுதிக்கப்பட்ட மலாலாவுக்கு, தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், தலையில் பலத்த காயமடைந்து இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று அதன் பிறகே மலாலா குணமடைந்தார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மலாலா தனது குடும்பத்தினருடன்  இங்கிலாந்திலேயே வசித்து வருகிறார்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, தனது 16 வது வயதில் “கல்வியில் பாலின சமத்துவத்தின் அவசியம்” குறித்து ஐ.நா.வில் உரையாற்றிய மலாலா, உலக தலைவர்களின் கவனத்தை தனது பேச்சில் புரட்சியை தீயை பரவ செய்ததின் மூலமாக பெற்றார்.

அத்துடன், தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் மலாலா தற்போது வரை பணியாற்றி வருகிறார். இதற்காகவே, மலாலாவுக்கு  கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப் பட்டது.

இதன் மூலமாக, உலகத்திலேயே மிக சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் மலாலா என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

இந்த நிலையில் தான், புரட்சி பூ மலாலா, இங்கிலாந்தில் அசர் என்ற இளைஞரை அந்நாட்டில் உள்ள பர்மிங்ஹாமின் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இது குறித்து, மலாலா யூசப்சை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் திருமண புகைபடங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், “என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள். அசரும் நானும் வாழ்க்கைக்கு துணையாக இருக்க முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள எனது வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள்” என்று, தனது பதிவில் மலாலா கூறியிருக்கிறார். 

இதையடுத்து, “புரட்சி பூ” மலாலாவுக்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதே போல், அண்மையில் மலாலா, இங்கிலாந்தில் உள்ள ஒரு ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில், “மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை இப்போது வரைக்கும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் வாழ்கைக்கு ஒரு துணைவர் வேண்டுமென்றால், பிறகு ஏன் திருமண பத்திரங்களில் கையெழுத்து இடுகிறீர்கள். அது வெறும் பாட்னர்ஷிப்பாக மட்டும் ஏன் இருக்க கூடாது” என்று, அதில் பதில் அளித்திருந்தார். 

மலாலாவின் இந்த பேட்டியானது, அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், “மலாலா திருமணத்திற்கு எதிராக தனது கருத்துகளை தெரிவித்துவிட்டார்” என்று, பாகிஸ்தான் ஊடகங்கள் விமர்சிக்கத் தொடங்கின.

அதன் தொடர்ச்சியாக, “புரட்சி பூ” மலாலா தற்போது இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.