தமிழ் திரையுலகின் பல திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகரான K.K.S.மணி அவர்கள் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவான பாரதி திரைப்படத்தில் பாரதியாருக்கு தந்தையாக நடித்து பிரபலம் அடைந்ததால், அதிலிருந்து பாரதி மணி என அழைக்கப்படுகிறார்.

நாகர்கோவில் அருகிலுள்ள பார்வதிபுரத்தில் பிறந்த பாரதிமணி அவர்கள், ஆரம்ப காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார். எழுத்தாளராகவும் "பாட்டையா" என அறியப்படும் பாரதிமணி, பாட்டையாவின் பழங்கதைகள், புள்ளிகள், கோடுகள், கோலங்கள் என புத்தகங்களை எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சேரனின் ஆட்டோகிராஃப், செல்வராகவன் இயக்கத்தில், தனுஷின் புதுப்பேட்டை, ஷங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த அந்நியன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பாரதி மணி. இந்நிலையில் நடிகர் பாரதிமணி நேற்று உயிரிழந்தார்.

சென்னையில் வசித்து வந்த பாரதி மணி தனது 84-வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். சிறந்த மேடை நாடகக் கலைஞரும், எழுத்தாளரும், தமிழ்த் திரைப்பட நடிகருமான பாரதி மணியின் மறைவுக்கு திரையுலகைச் சார்ந்த பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.