வறுமையைப் போக்க வேறு வழி தெரியாமல், தங்களது 9 வயது மகளை, 55 வயது முதியவரிடம் தந்தையே விற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தான் இப்படி ஒரு கொடுமை அரங்கேறி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள் மற்றும் இது வரையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அனைவரும் ஏறக்குறைய அந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சமடைந்து வருகிறார்கள் என்பதைக் கடந்த காலங்களில் உலகமே வேடிக்கை பார்த்தது.

அத்துடன், உலக நாடுகள் யாவும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அளித்து வந்த பொருளாதார உதவிகள் அனைத்தையும் எல்லா உலக நாடுகளும் நிறுத்திக் கொண்டன. இதனால், தற்போது ஆப்கானிஸ்தான் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

மேலும், அங்கு பசி பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகளும் வெளியானது.

இந்த நிலையில், அன்றாட பிழைப்புக்குக் கஷ்டப்படும் அந்நாட்டு மக்கள், உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருமணம் என்ற பெயரில் தங்களின் குழந்தைகளை முதியோர்களுக்கு விற்பனை செய்யும் அவலமும் அந்நாட்டில் தற்போது அரங்கேறி வருகிறது.

அதாவது, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்திருக்கும் அங்குள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்களது 9 வயது மகளான பர்வானா மாலிக் என்ற சிறுமியை, அந்த சிறுமியின் தந்தை அப்துல் மாலிக் , அந்த பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த 55 வயது முதியவரிடம் விற்று உள்ளார். 

முக்கியமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 வயதான மற்றொரு மகளையும் இதே தந்தை தான் விற்பனை செய்தார். இந்த விவகாரம் அந்நாட்டின் பத்திரிகைகளில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. 12 வயது மகளை விற்றதைத் தொடர்ந்து, தற்போது 9 வயது மகளையும் அவர் விற்று உள்ளார். 

இது குறித்து அந்நாட்டின் ஊடகத்தில் பேசிய அந்த சிறுமியின் தந்தை, “கழுத்தை நெரித்த பொருளாதார நெருக்கடி காரணமாக, எனது மகளை விற்பனை செய்ததாக” அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, தந்தையால் 55 வயது முதியவருக்கு விற்பனை செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமி பேசும் போது, “நான் படிக்க வேண்டும் என்றும்,  ஆப்கானிஸ்தானில் நாட்டில் நான் ஒரு ஆசிரியராக பணியாற்ற வேண்டும்” என்றும், தனது ஆசையை அவர் வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.