“ஐரோப்பாவில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 5 லட்சம் மக்கள் கொரோனாவால் உயிரிழக்கலாம்” என்று, உலக சுகாதார அமைப்பு WHO எச்சரிக்கைத் தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், கொரோனா பரவல் இன்னும் முழுமையான கட்டுக்குள் வராமல் பரவிக்கொண்டு வருகிறது.

இது வரை உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.93 கோடியாக அதிகரித்து உள்ளது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 50 லட்சத்து 44 ஆயிரத்து 338 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது, 2 வது கொரோனா அலைக்குப் பிறகு சற்று குறைந்து காணப்பட்ட கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று, தற்போது அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. 

சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சீனாவில் புதிதாக கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளதால், 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஜோ நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு, அவசர சூழல் தவிர்த்து பொது மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தான், “ஐரோப்பாவில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 5 லட்சம் மக்கள் கொரோனாவால் உயிரிழக்கலாம்” என்று, உலக சுகாதார அமைப்பான WHO எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாகக் கவலை தெரிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா இயக்குநர் ஹான்ஸ் க்ளூக், “ஐரோப்பிய நாடுகளில் கோவிட்19 நோய்த் தொற்றுகளின் தற்போதைய நிலைமை தொடர்ந்தால், பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் மேலும் 5 லட்சம் இறப்புகள் ஏற்படலாம்” என்று, எச்சரித்து உள்ளது. 

“ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 53 நாடுகளில் பரவும் தற்போதைய கொரோனா நோய்த்தொற்று வேகம் மிகவும் கவலைக்குரியதாக உள்ளதாகவும்” அவர் கூறியுள்ளார்.

மேலும், அங்கு கடந்த சில வாரங்களாக தொடந்து குறைந்துவந்த கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்புகள், தற்போது மீண்டும் சில நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 945 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாகத் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், “மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27, 06, 493ஆம் அதிகரித்து உள்ளது என்றும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,191 ஆக உள்ளது” என்றும், கூறப்பட்டு உள்ளது.

மேலும், “நேற்றைய தினம் 1,047 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்றும், அதன்படி குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 59 ஆயிரத்து 300 ஆக இருப்பதாகவும்” சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.