“எதிர்பார்த்ததை விட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருவதாக” அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்து உள்ளது.

இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலின் போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, இந்திய எல்லைப் பகுதியில் அப்போது போர் விமானங்களை விமானப்படை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. 
அதேபோல், சீனாவும் இந்தியாவுக்கு முன்பாகவே, அங்கு 10 ஆயிரம் ராணுவ வீரர்களைக் குவித்து வைத்திருந்தது. இவற்றுடன், பல போர் வாகனங்களையும் அங்கு நிறுத்தி வைத்திருந்தது. 

முக்கியமாக, இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. இதனால், இந்தியா - சீனா இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன.

மேலும், சீனாவுக்கு எதிரான போருக்கு இந்தியா தயாராகிவிட்டதாகவே அப்போது தகவல்கள் வெளியானது. ஆனால், அதன் தொடர்ச்சியாகச் சீனா பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செய்திகள் பரவி வைரலாகி வந்தன. 

அப்போது தான், 20 இந்திய வீரர்களைக் கொன்ற சீனாவைப் பழிவாங்கவும், சீனாவுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவும் சீனா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட முக்கிய செயலிகளை இந்திய அரசு அதிரடியாகத் தடை செய்தது.

அத்துடன், இது தொடர்பாக அப்போது பேசிய பிரதமர் மோடி, “பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்றும், இந்தியாவிடம் அத்துமீறினால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுப்போம்” என்றும் சூளுரைத்தார்.

“நம் உரிமையில் எந்தவித சமரசமும் கிடையாது என்றும், நாட்டிற்காக நம் ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம் ஒரு நாளும் வீணாகாது என்றும், நம்மை நாம் நிரூபிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இது, உலக அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட, சீனா தனது அணு சக்தியை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்று பென்டகன் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி, “சீனாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம் என்றும், 2030 க்குள் 1,000 ஆக உயரலாம்” என்றும் அறிக்கை கூறுகிறது.

அத்துடன், “தைவானின் நிலை குறித்த சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும்” அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

“இந்த அறிக்கை சீனாவுடனான வெளிப்படையான மோதலை பரிந்துரைக்கவில்லை என்றாலும், அது போர்க்களம், காற்று, நிலம், கடல், விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகிய அனைத்து களங்களிலும் அமெரிக்காவிற்கு சவால் விடும் சீன இராணுவத்தின் நோக்கத்தை சுட்டி காட்டும் வகையில் உள்ளது.

இதனால், எல்லையில் இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கொண்டுள்ள சீனா, கடந்த ஒரு வருடத்தில் நினைத்ததை விட மிக வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது, இந்தியாவிற்கான எச்சரிக்கையாகவே அது பார்க்கப்படுவதாக கருத்துக்களும் எழுந்துள்ளன.