அபுதாபியில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான குடும்ப நீதிமன்றத்தில் கனடா நாட்டு தம்பதிக்கு திருமண ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

marriage

அபுதாபியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான குடும்ப நீதிமன்றத்தில் முதல் முறையாக கனடா நாட்டு தம்பதிக்கு திருமண ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அபுதாபி நீதித்துறை செயலாளர் யூசுப் சயீத் அல் அப்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது: அபுதாபியில் கடந்த மாதம் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்காக பிரத்யேக குடும்ப நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிற மதத்தினரும் எளிதாக திருமணம், விவாகரத்து உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதில் தற்போது ஆன்லைன் மூலம் சேவைகளை பெறுவதற்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த வசதியில் நீதித்துறையின் இணையத்தளத்தில் குடியிருப்பு விசா பெற்றவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் தங்கள் தனிப்பட்ட குடும்ப விவகாரங்கள் குறித்த தீர்வை பெற முடியும். சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப திருமண ஒப்பந்தங்கள் மற்றும் பதிவு, காணொலி காட்சி முறையில் தொலைதூரத்தில் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் அரபு நாடுகளிலேயே முதல் முறையாக அபுதாபி நீதித்துறை சார்பில் முதல் சிவில் திருமண ஒப்பந்தமானது கனடா நாட்டு தம்பதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அபுதாபி நீதித்துறை கொண்டாடுகிறது.

இந்நிலையில் அபுதாபியில் வசித்து வரும் கனடா நாட்டு தம்பதியினர் திருமண ஒப்பந்த சேவையை எளிதாக்கியதற்காக தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர். குறிப்பாக எளிமையான விண்ணப்பம், நடைமுறைகள் மற்றும் துரிதமான சேவை இவைகளுக்காக நீதித்துறையை பாராட்டியுள்ளனர். அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியும், அபுதாபி நீதித்துறை தலைவருமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யானின் உத்தரவின்படி நீதித்துறையில் நெகிழ்வான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப இஸ்லாமியர் அல்லாதவர்கள் தங்கள் கலாசாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களது உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக உள்ளது.

அதனைத்தொடர்ந்து இது இஸ்லாமிய மார்க்கத்தின் நேர்மறையான பிம்பத்தையும், சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது. மேலும் குடியிருப்பாளர்களுக்கு சிறப்பான சேவையை உறுதி செய்வதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.