தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அருண் வைத்தியநாதன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விமர்சன ரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் பல சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டதோடு விருதுகளையும் பெற்றது.

இதனை அடுத்து இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளிவந்த கல்யாண சமையல் சாதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மலையாளத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்த பெருச்சாழி திரைப்படத்தையும் இயக்கினார் அருண் வைத்தியநாதன்.

கடைசியாக ஆக்சன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்த நிபுணன் திரைப்படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் அடுத்ததாக  குழந்தைகளைக் கொண்டு குழந்தைகள் விரும்பும் வகையிலான புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு கொரோனா ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

படபிடிப்புக்காக கும்பமேளா, வாரணாசி உள்ளிட்ட பகுதியில் 28 நாட்கள், 160 நபர்களுடன் படப்பிடிப்பை முடித்து அமெரிக்கா திரும்பிய இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஒமைக்ரான் தொற்று என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார் அருண் வைத்தியநாதன்.