தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சர்வானந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மஹா சமுத்திரம். சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடித்து வெளிவந்த மஹா சமுத்திரம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வரும் சர்வானந்த் எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இதனையடுத்து மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் சர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கணம்.

தெலுங்கில் ஓகே ஒக்க ஜீவிதம் என்ற பெயரிலும் தமிழில் கணம் என்ற பெயரிலும் வெளிவர உள்ள இத்திரைப்படத்தில் நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் ரமேஷ் திலக் மற்றும் சதீஷ் உடன் இணைந்து நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கியுள்ள கணம் படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கணம் திரைப்படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 29-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.