கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது புதிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

அதன்படி,

- பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். 

- கடைகளில் வாடிக்கையாளர்களிடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 

- கூடுமானவரை வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை பின்பற்ற வேண்டும்.

- கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரமாகவும், கண்டிப்பாகவும் அமல்படுத்த வேண்டும்.

-  மாவட்ட அளவில் இவற்றை அமல்படுத்துவது, மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

- சமூக இடைவெளியை பின்பற்ற செய்வதற்காக, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- ஒரு வாரமாக 10 சதவீத தொற்று பாதிப்பு இருந்தால், அந்த பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

- மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் 40 சதவீத அளவுக்கு நிரம்பினாலும், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கலாம் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின் படியும் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

- நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உள்ளூர் மற்றும்  மாவட்ட அளவில் அமல்படுத்துவதற்காக கடந்த 21 ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

- இந்த கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் யாவும், வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றன என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

- அதே போல், தேவைக்கேற்ப உள்ளூர் மட்டத்தில் இன்னும் புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தலாம் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- பண்டிகை காலத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க இன்னும் சில கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம் என்றும், கூறப்பட்டு இருக்கிறது.

- இவற்றுடன், மருத்துவமனைகளில் நிலவரத்தை கண்காணிக்க வேண்டும் என்றும், ஆக்சிஜன் சப்ளை போதிய அளவுக்கு இருப்பதையும், அத்தியாவசிய மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- அதே போல், கொரோனா பரிசோதனைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

- பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றுதல் ஆகிய 5 அம்ச வியூகத்தை பின்பற்ற வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டு உள்ளது.

- பொது இடங்களில் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

- ஒமைக்ரான் குறித்த வதந்திகளை தவிர்க்க மாநில அரசுகள் அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தி, சரியான விளக்கத்தையும், உண்மை நிலவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு அதிரடியாக தெரிவித்திருக்கிறது.