“ஒமைக்ரான் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால், கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரமாக அமல்படுத்துங்கள்” என்று, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ், தற்போது பல்வேறு வைரஸ்களால் உருமாற்றமடைந்து, வேகமாக பரவி வருகிறது. 

அந்த வகையில், ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பரவிக்கொண்டு தான் இருக்கிறது. 

தற்போது, அது புதுிதாக ஒமிக்ரான் என்னும் பெயரில் உருமாற்றம் அடைந்து உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

அந்த வகையில் பார்க்கும் போது, இந்தியா உள்பட உலகின் 116 நாடுகளில் இந்த ஒமைக்ரான் வகை வைரஜ் பரவி உள்ளது.

அதன் படி, இந்தியாவில் கிட்டதட்ட 19 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு பரவி இருக்கிறது. இந்த வகையிலான வைரஸ், டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்றும், நிபுணர்கள் எச்சரித்து உள்ளன.

இதன் காரணமாக, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. 

அந்த வகையில் தான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

அத்துடன், இந்தியாவில் ஒமைக்ரானால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 600 ஐ நெருங்கி வருகிறது. 

இந்தியாவில் 19 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவினாலும் அதிக பாதிப்பு நிறைந்த தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு, மத்திய அரசின் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், அடுத்தடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன.

இந்த சூழலில் தான், இன்னும் சில தினங்களில் புதிய ஆண்டான 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்க இருக்கிறது. 

இதனால், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தமிழகம் உட்பட உலக மக்கள் யாவரும் ஆயத்தமாகி வருகின்றனர்.

அப்படி, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மக்கள் பெருமளவு கூடினால், கொரோனா பரவல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல மாநிலங்கள் அதிரடியாக தடை விதித்து உள்ளன.

இந்தநிலையில் தான், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தற்பேர்து கடிதம் எழுதி உள்ளார். அதில், மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய விசயங்கள் குறித்தும் அறிவுறுத்தி உள்ளார்.

அந்த வகையில், “நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும், ஆனால் புதிய ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது என்றும், கவலை தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 600 ஐ நெருங்கி உள்ளதால், அனைத்து மாநிலங்களும் இன்னும் உஷாராக இருக்க வேண்டும் என்றும், மாவட்ட அளவில் கொரோனா நிலவரத்தை ஆட்சியர்கள் கண்காணித்து உடனுக்குடன் முடிவுகள் எடுத்து ஒமைக்ரான் மேலும் பரவாமல் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.