உலகை மிரட்டி வரும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது வளைகுடா நாடுகளிலும் நுழைந்துள்ளது.

saudiarabia

புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 பிறழ்வுகளை கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் செளதி அரேபியாவில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் செளதி அரேபியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் செளதியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,49,000. இங்கு கொரோனாவால் இதுவரை 8,836 பேர் உயிரிழந்துள்ளனர். செளதி அரேபியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் போடப்பட்டும் வருகின்றன. செளதி அரேபியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா கால கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டிருந்தன. குறிப்பாக முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தன.

மேலும் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 15-ந் தேதி முதல் சர்வதேச விமான சேவையை இந்தியா தொடங்க திட்டமிட்டிருந்தது. ஆனால் ஓமிக்ரான் பரவலைத் தொடர்ந்து சர்வதேச விமான சேவை தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் வட ஆப்பிரிக்காவில் இருந்து செளதி அரேபியா வந்த ஒருவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதனையில் அவருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் செளதி அரேபியாவில்தான் முதல் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து கடந்த வாரம் முதல் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் 7 விமான சேவைகளுக்கு செளதி அரேபியா தடை விதித்திருந்தது. ஆனால் வட ஆப்பிரிக்காவுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்படவில்லை. தற்போது வட ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வட ஆப்பிரிக்காவுக்கான விமான சேவைகளையும் செளதி அரேபியா ரத்து செய்யலாம் என தெரிகிறது.