“எனக்குத் தெரியாமால் எப்படி நீ கர்ப்பம் ஆனாய்?” என்று, கேள்வி கேட்ட கணவனை, ஆத்திரமடைந்த மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, விழுப்புரம் நகரம் நாயக்கன் தோப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான சந்தோஷ் என்பவர், அந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

கொத்தனார் சந்தோஷிக்கு 36 வயதான மனைவி சுரேகா மற்றும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

இந்த சூழலில் தான், சந்தோஷ் மனைவி சுரேகா தற்போது 3 வது முறையாக கருவுற்றார்.

சுரேகா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தான், தனது மனைவி கருவுற்று இருப்பது, அவரது கணவரான கொத்தனார் சந்தோஷிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால்,  மனைவி மீது  சந்தேகப்பட்ட அவர், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இதனால், ஒரு கட்டத்தில், குடித்துவிட்டு கடும் மது போதையில் வீட்டிறகு வந்த அவர், தனது மனைவியிடம் வந்து “எனக்குத் தெரியாமல் நீ எப்படி கர்ப்பம் ஆனாய்?” என்று கேள்வி, கேள்வி கேட்டு சண்டைப் போட்டிருக்கிறார்.

ஆனால், இந்த பிரச்சனை அவருக்கு முடிவுக்கு வராத நிலையில், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் சந்தோஷ், தனது மனைவியிடம் அடிக்கடி சண்டைப் போட்டு, கடும் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த சூழலில் தான், வழக்கம் போல் கணவன் - மனைவி இடையே இன்றும் மீண்டும் சண்டை வந்திருக்கிறது.

இந்த சண்டையின் போது, கடும் ஆத்திரமடைந்த அவரது மனைவி சுரேகா, வீட்டில் இருந்த கத்தியால் கணவர் சந்தோசை வயிறு, மார்பு என்று பல இடங்களில் ஆத்திரம் தீர குத்தி கொலை செய்து உள்ளார். 

இப்படி, மனைவி சுரேகா கத்தியால் குத்தியதில், கணவன் சந்தோஷ் தனது வீட்டிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், இது குறித்து விரைந்து வந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார், சந்தோஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், கணவனை குத்தி கொலை செய்த அவரது மனைவி ரேகாவை, கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “தான் கருவுற்று இருப்பது தொடர்பாக, கணவன் சந்தேகப்பட்டு, தினமும் குடித்துவிட்டு வந்து கொடுமை செய்ததால், கொலை செய்துள்ளதாக” அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.